;
Athirady Tamil News

சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரனில் தரையிறங்கும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

0

இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று அறிவித்தது. ஜி-20 விண்வெளி பொருளாதார தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:- சந்திரயான்-3 விண்கலம் ஏவுகணையானது, மார்க்-III (எல்விஎம்3) மூலம் ஏவப்படும். இதற்காக ஜூலை 12 மற்றும் 19-ந்தேதிக்கு இடைப்பட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2-க்கு பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பணியாகும்.

இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கும், உலாவுவதற்கும் இறுதி வரை தனது திறனை இந்த விண்கலம் வெளிப்படுத்தும். சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தரையிறங்கும் தொகுதி, உந்துவிசை தொகுதி மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் மற்றும் நிரூபிக்கும் நோக்கத்துடன் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல்படி, லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் மற்றும் ரோவரை நிலைநிறுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இது அதன் இயக்கத்தின் போது சந்திரன் மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ளும் வகையிலி லேண்டர் மற்றும் ரோவரில் அறிவியல் தரவுகளை கொண்டுள்ளன. எனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ந்தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24-ந்தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும். சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது விண்கலம் தரையிறங்கும் தேதி தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தரையிறங்கும் போது, சூரிய ஒளி இருக்க வேண்டும்.

எனவே ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று தரையிறங்கும். லேண்டரும், ரோவரும் சூரிய ஒளி இருக்கும் வரை 14 நாட்கள் வரை நிலவில் இருக்கும். சூரிய ஒளி இல்லாத போது, ரோவரில் இருக்கும் ஒரு சிறிய சோலார் பேனல் அடுத்த 14 நாட்களுக்கு ஒளி வரும் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சக்தியை உருவாக்கும். அங்குள்ள வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது. அத்தகைய சூழலில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்ந்து செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நாங்கள் சில சோதனைகள் செய்தோம். அதன் மூலம் கடுமையான சூழ்நிலையிலும் பேட்டரி செயல்படுவதற்கான வழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.