மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை- சித்தராமையா அறிவிப்பு!!
கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும். 2023-24 நிதியாண்டில் இது இரண்டாவது பட்ஜெட். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.
மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.