இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க வேண்டும்!!
இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
இதன் போதும் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்ல உள்ளார்.
இவ்வாறு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர் கதையாகியுள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்தமாறு இந்தியா பிரதமருக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்குவதோடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அழுத்தங்களை வழங்க வேண்டும் – என்றார்.