மீண்டும் துப்பாக்கி சண்டை: இஸ்ரோ ராணுவ தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் பலி!!
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஹமாய் அமைப்பினர் மற்றும் பாலஸ்தீனிய போராளி குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாலஸ்தீனியத்தின் மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ஜெனின் நகரில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 நாட்களுக்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலஸ்தீனியர்கள் 12 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் பாலஸ்தீனியர் ஒருவர் நடத்திய கார் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தனர்.
அதன்பின் ஜெனின் நகரில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. இதனால் பதட்டம் சற்று தணிந்து இருந்தது. இந்த நிலையில் மேற்கு கரையில் மீண்டும் சண்டை ஏற்பட்டது. நாப்லஸ் அருகே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுவுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு போராளிகள் உள்பட 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.