திருமண வாக்குறுதியை மீறியதால் கற்பழிப்பு வழக்கு: ஒருமித்த உடலுறவு கற்பழிப்பு குற்றம் ஆகாது என நீதிமன்றம் தீர்ப்பு!!
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளிக்கையில், ”திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமித்த உடலுறவு ஏற்பட்டு, பின்னர் வேறு சில காரணங்களால் அதே உறுதிமொழி நிறைவேற்றப்பட முடியாமல் போனால், அந்த உடலுறவை பலாத்காரமாக கருத முடியாது என்று கூறியிருக்கிறது”.
மனுதாரர் மீதுள்ள மற்ற மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு விடப்படுகின்றன என்று நீதிபதி ஆர்.கே. பட்நாயக், தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் ”நல்ல நம்பிக்கையில் அளிக்கப்பட்ட ஒரு திருமண வாக்குறுதியை பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நிறைவேற்ற முடியாமல் போவதற்கும், திருமணம் செய்து கொள்வதாக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிக்குமிடையே ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது.
முதல் வாக்குறுதியை வைத்து பார்க்கும்போது பாலியல் நெருக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது ஐ.பி.சி. செக்ஷன் 376-ன் கீழ் வரும் கற்பழிப்பு குற்றம் என கருத முடியாது. அதே நேரத்தில், இரண்டாவது வாக்குறுதியின்படி பார்த்தால் திருமணம் செய்து கொள்வதாக தரப்பட்ட வாக்குறுதியே பொய்யானது என்றால் அது இத்தகைய செக்ஷன்களில் வரும்” என்று தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. “ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, இருவரும் உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொண்டாலும், சில காரணங்களால் திருமணம் நடக்காமல் போகலாம்.
அதனால் அந்த ஆண் வாக்குறுதியை மீறியதாக கூற முடியாது. இதன் மூலம் அவருக்கும் அந்த பெண்ணிற்கும் நடந்திருந்த உடலுறவு, பாலியல் பலாத்கார குற்றம் என்று கூற முடியாது” என்று முன்னதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை, இவ்வழக்கில் உயர்நீதிமன்ற பெஞ்ச் கவனித்தில் கொண்டது குறிப்பிடத்தக்கது. “நட்பாக ஆரம்பித்த உறவு பிறகு கசப்பானதாக மாறியிருந்தால், அது எப்போதும் ‘அவநம்பிக்கை’ என முத்திரையிடப்படக்கூடாது. இதற்காக அந்த ஆணின் மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்படக்கூடாது” என்று இந்த வழக்கு தொடர்பாக கூறியிருக்கிறது.