கேரளாவில் மழை பாதிப்பால் மக்கள் கடும் அவதி- 7,850 பேர் முகாம்களில் தஞ்சம்!!!
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 1,023 வீடுகள் பகுதி அளவிலும், 51 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை படகுகள் மூலமாக மீட்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தற்போதைய நிலவரப்படி 7,850 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கோட்டையம், திருச்சூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைக்கு மேலும் 8 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களை தவிர பல மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கடலோர பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசுவதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.