பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிரான மனு மீது விசாரணை!!!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று (07) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்தில் நிதி அமைச்சர்களாக பணியாற்றிய பசில் ராஜபக்ஸ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் W.D.லக்ஷ்மன், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர மற்றும் அப்போதைய அமைச்சரவைக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இடம்பெறுகின்றது.
இதன்போது, மனுவை தாக்கல் செய்த பேராசிரியர் மஹீம் மென்டிஸ் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடயங்களை முன்வைத்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 600 பில்லியன் ரூபா வரிவிலக்கை மேற்கொண்டதன் மூலம் அரச வருமானத்தில் 35 வீதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
இவ்வாறு வரிவிலக்கு மேற்கொள்ளப்பட்டமையினால், வரிகளில் சலுகைகளைப் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களின் இலாபம் இதன் காரணமாக கணிசமான அளவு அதிகரித்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வரிச்சலுகை மூலம் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை எனவும் வரிகளை குறைக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவையில் முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தீர்மானம் எடுக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னரே குறித்த தீர்மானத்திற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இதன்போது சுட்டிக்காட்டினார்.