பார்க்காமலேயே பழகியதால் நேர்ந்த விபரீதம்: நைஜீரிய மோசடி கும்பலின் மிரட்டலால் தூக்கில் தொங்கி உயிரை விட்ட இளம்பெண்!
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் அஸ்வினி. பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைய தளத்தில், தான் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி நபர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ்நாடு திரும்பியவுடன் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியதாக தெரிகிறது. குடும்ப சூழ்நிலைக்கு லண்டன் மாப்பிள்ளை ஒத்து வராது என நினைத்த இளம் பெண், அடையாளம் தெரியாத மர்ம நபரிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.
இருப்பினும், அந்த நபர் தொடர்ந்து வாட்ஸ் அப் காலில் தொந்தரவு கொடுத்து வந்தார். இந்த இக்கட்டான சூழலில் இருந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர், உங்களுக்கு 15 ஆயிரம் டாலர் பரிசாக அனுப்பி உள்ளேன் எனவும், சென்னையில் சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருக்கிறது எனவும் கூறியுள்ளார். ரூபாய் 45 ஆயிரம் செலுத்தினால் அந்த பார்சல் உங்கள் வீட்டுக்கு வந்து விடும் பணம் செலுத்தவில்லை என்றால் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து செய்வார்கள் எனவும் மிரட்டி ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்தார்.
இதனால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இளம் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது, தான் இந்த விவரங்கள் தெரிய வந்தன. டெல்லியில் இருந்து செயல்படும் நைஜீரியன் மோசடி கும்பலின் மோசடியில் இது ஒரு வகை என போலீசார் தகவல் தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டு உள்ள கல்வித் தகுதி வேலை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரா? வசதியான குடும்பத்தை சேர்ந்தவரா? என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தாற் போல பரிசு அனுப்பி இருக்கிறேன் என இவர்கள் மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.