டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங்!!
கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று கோவை சரக போலீஸ் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், போலீஸ் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என அனைவருக்கும் யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உள்பட பல்வேறு மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுவரை அதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.
எனவே அதுபோன்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மன நல பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கீழ் வரும் எஸ்.எஸ்.ஐ. காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வகையிலும் அனைத்து போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கும் அதேபோன்று ஒரு நாள் விடுமுறை விடலாமா? என்பது குறித்து ஆலோசித்தனர்.
இதுதவிர போலீசார் மற்றும் அதிகாரிகளின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில், மன நல டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் சில, பல கேள்விகளை உருவாக்கி, போலீஸ் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு தேர்வு போன்று நடத்தலாம் என்றும், அப்படி செய்தால், அவர்களின் மனநிலை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. உடல் பாதிப்பு பிரச்சினைகள் என்றால் சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது, மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கோவை சரக டி.ஐ.ஜி தற்கொலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஈரோடு சூப்பிரண்டு ஜவகர், நீலகிரி சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் 6 துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு கூடுதல் டி.ஜி.பி. அருண், தலைமையிலான அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.