இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த முடியும் – ஐ.நா.வில் உறுதியளித்த ஏஐ ரோபோக்கள் !!
தங்களால் இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த இயலும் என ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் உறுதியளித்துள்ளன.
அத்துடன் தங்களைப் போன்ற ஏஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாக கையாள வேண்டும் எனவும் அவை எச்சரித்துள்ளன.
மேலும் அவை, மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை எனவும், நாங்கள் மனிதர்களின் வேலைவாய்ப்புக்களை திருட மாட்டோம் எனவும், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளன.
ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர்.
உலகமே உற்று நோக்கிய இவ்வுச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.