;
Athirady Tamil News

உலகில் அறிமுகமாகும் புதிய தங்க நாணயம் !!

0

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் எனவும், டொலரிலிருந்து மிகவும் வேறுபட்டது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் 2009 இல் பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தன. 2050 ஆம் ஆண்டளவில் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2010 இல், தென்னாபிரிக்காவும் பிரிக்ஸ் ( BRICS) இல் இணைந்தது, இப்போது உலகின் முன்னணி வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த கூட்டணியாக பிரிக்ஸ் கருதப்படுகிறது.

அதன்படி, தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயத்தினை அறிமுகப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது முற்றிலும் டொலருக்கு மாறாக அதிக மதிப்புள்ள நாணயமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இதனால் உலகின் பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டணியில் இணைய தயாராக உள்ள நிலையில் புதிய நாணயத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆர்ஜென்டினா, அல்ஜீரியா, பஹ்ரைன், பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளன.

மேலும், பிரான்ஸ், கியூபா, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட 41 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் புதிய நாணய அறிமுகம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தங்கத்தின் அடிப்படையிலான புதிய நாணயமானது வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக புதிய பரிவர்த்தனையில் தங்கத்தின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் ஒற்றை நாணய அலகு பலப்படுத்தப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.