காசிமேட்டில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு!!
காசிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை நாளான இன்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பவில்லை. இன்று காலை காசிமேடு துறைமுகத்துக்கு 150 முதல் 180 விசை படகுகள் மட்டுமே கரை திரும்பின. இதனால் பெரிய மீன்கள் வரத்து குறைந்தது. மேலும் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து விற்கப்பட்டது. குறிப்பாக வஞ்சிரம், சங்கரா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.
வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் ரூ.1400 வரை விற்பனை ஆனது. விலை அதிகம் என்றாலும் மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர். பாறை, கொடுவா, சீலா போன்ற மீன்கள் வரத்து இல்லை. இன்று விடுமுறை நாள் என்பதால் காசிமேட்டுக்கு அதிகாலை 2 மணி முதலே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஆனால் மீன் வரத்து குறைந்து விலை அதிகமாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.