ரூ.1000 உதவித்தொகையால் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத்திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்கள் சிற்றரசு- எழிலரசி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு ‘திராவிட மாடல் ஆட்சி’ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை-வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்-மாணவ-மாணவிகள் அவர்களுக்காக ‘காலை உணவு திட்டம்’, பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அறிவித்த அந்தத் திட்டம், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நம்முடைய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாகியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்ற செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கோடிப் பேர் அதைப் பெற இருக்கிறார்கள். எனவே சிலருக்கு இன்றைக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் வந்திருக்கிறது. பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் இன்றைக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.