வட மாநிலங்களை தொடர்ந்து மிரட்டும் கனமழை.. அமர்நாத் யாத்திரை மூன்றாவது நாளாக நிறுத்தம்!!
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 153 மிமீ மழை பதிவாகி உள்ளது. மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 58 வயது நபர் உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து அமர்நாத் யாத்திரை மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. குகைக்கோயிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் முகாம்களில் தங்கி உள்ளனர். அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. தலைநகர் சண்டிகரில் நேற்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.
இதற்கிடையே வடமேற்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை கேரளா, கர்நாடகாவில் இடைவிடாமல் மழை பெய்கிறது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.