பாலியல் உறவு கசந்தால் தம்பதிகள் சட்டப்படி விவாகரத்து கோரலாமா?
‘இல்லற வாழ்வில் தம்பதிக்குள் உடலுறவு இல்லையென்றால், அதுவே அவர்கள் விவாகரத்து கோரக் காரணமாக இருக்கலாம்’ என்று இது குறித்த ஒரு வழக்கில் ஜூன் 16ஆம் தேதி அளித்த தீர்ப்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்து திருமண சட்டத்தின்படி நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தது. ஆனால் பொதுவாக இந்திய தண்டனைச் சட்டம், உடலுறவு விஷயத்தை விவாகரத்து கோரும் அளவுக்குத் தீவிரமாக கருதவில்லை.
ஆனாலும் ஆணோ, பெண்ணோ தனது வாழ்க்கைத் துணையுடன் நீண்ட காலமாக உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அந்த விஷயம் மிகவும் தீவிரமான பிரச்னையாகக் கருதப்படும்; சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ விவாகரத்து கோர அதுவே காரணமாக இருக்கலாம் எனவும் நீதிமன்றங்கள் பலமுறை தங்களது தீர்ப்புகளில் தெரிவித்துள்ளன.
ஒருவரின் அகவாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் உடலுறவை அடிப்படையாகக் கொண்ட விவாகரத்து வழக்குகளில் நீதிமன்றங்களின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை இங்கு விரிவாக காண்போம்.
திருமண வாழ்வில் தனது கணவருக்கோ மனைவிக்கோ தாம்பத்திய சுகம் அளிப்பது துணையின் முக்கியப் பணியாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக, உடலுறவு தொடர்பான சட்ட விதிமுறைகளை ஆண்களே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
பாலியல் உறவுக்கு வற்புறுத்துவது உள்ளிட்ட உடலுறவு தொடர்பான பிற அம்சங்களும், திருமண உறவில் தம் கணவர் அல்லது மனைவியின் பாலியல் விருப்பங்களைத் தீர்ப்பது ஒருவரது முக்கியமான பொறுப்பு என்ற கருத்தை ஊக்குவிக்கிறது.
முறிந்த திருமண பந்தம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஜோடி கடந்த 2019 டிசம்பரில் திருமண பந்தத்தில் இணைந்தது. திருமணத்திற்குப் பிறகு, புதுமணப்பெண் அவரது கணவருடன் 28 நாட்களே சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
அதன் பிறகு அவர் தன் கணவரின் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அத்துடன் அவர் கணவருடன் வாழ்ந்த 28 நாட்களும் அவர்களுக்குள் உடலுறவு இல்லாமல் இருந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, 2020 பிப்ரவரியில் அந்தப் பெண்ணின் சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.
அதாவது, தனது கணவருடனான திருமண உறவை முறிக்கக் கோரி ஒரு வழக்கையும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-வின் கீழ் மற்றொரு வழக்கையும் அந்தப் பெண் தொடர்ந்திருந்தார். ஒரு பெண்ணின் மீதான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தலைத் தடுக்க 498ஏ சட்டப்பிரிவு வழிவகுக்கிறது.
பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கும் பிரம்மகுமாரிகளை பின்பற்றுபவராக தன் கணவர் இருக்கிறார் என்று விவாகரத்து கோரிய தனது மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குளிர்சாதனப் பெட்டி, சோஃபா மற்றும் தொலைக்காட்சியை தாய் வீட்டு சீதனமாகக் கொண்டு வரும்வரை உடலுறவுக்கு வாய்ப்பில்லை என்று தன் கணவர் கூறியதாகவும் மனுதாரரான பெண் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் 2022 நவம்பரில், மனுதாரரான பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
திருமண பந்தத்தில் உடலுறவு என்பது முக்கியமான விஷயம், ஒருவர் தன் திருமண உறவை முறித்துக்கொள்ள இதை அவர் காரணமாகக் கூறலாம் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி மனுதாரர் தனது கணவராலோ அல்லது அவரது குடும்பத்தினராலோ கொடுமைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
உடலுறவு கசந்து போக என்ன காரணம்?
ஒரு தம்பதி தங்களது திருமண வாழ்வில் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
பணம் அல்லது சொத்துகளைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தும் கணவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களைத் தண்டிக்கவும் இந்த சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
கணவன் அல்லது மனைவிக்கு இனப்பெருக்கத் திறனற்ற நிலையின் (Impotence) காரணமாக உடலுறவு சாத்தியமில்லாமல் போனால், இந்து திருமண சட்டத்தின்படி, அந்தத் திருமணத்தை செல்லாது என அறிவிக்கலாம். இத்தகைய சூழலில் கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரலாம்.
இதேபோன்று, திருமணத்திற்குப் பிறகு சில காலம் தம்பதிக்கு இடையே தாம்பத்திய உறவு இருந்து, அதன்பின் அந்த உறவில் இருந்து கணவன் அல்லது மனைவி விலக நேரலாம். அவ்வாறு விலகும்போது மற்றொருவர் தனது இணையை பாலியல் உறவுக்கு வற்புறுத்தினாலோ, கொடுமைப்படுத்தினாலோ அதையே ஒருவர் விவாகரத்து கோருவதற்கான காரணமாகக் கூறலாம்.
விவாகரத்து கோருவதற்கான இந்த சட்டப்பூர்வ வழிமுறைகள் அனைத்து மதத்தினரின் திருமணங்களிலும் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் திருமண பந்தத்தில் இணையும் பெண்ணை அவரது கணவரோ, குடும்ப உறுப்பினர்களோ, உறவினர்களோ கொடுமைப்படுத்தினால் அதன் விளைவாக அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இத்தகைய சூழலில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டத்தின் (498 ஏ) பிரிவில் வழிவகை உள்ளது.
இதுமட்டுமின்றி பணம் அல்லது சொத்துகளைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தும் கணவன் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களைத் தண்டிக்கவும் இந்த சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
இல்லற வாழ்க்கையில் ஒருவர் தனது இணையருடன் உடலுறவு கொள்ளாமல் நீண்ட நாட்கள் விலகி இருந்தால், அது, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமையான விஷயமாகக் கருதப்படும். அத்துடன் இதையே காரணமாகக் கூறி ஒருவர் விவாகரத்து கோரலாம் என்று இதுதொடர்பான பல வழக்குகளின் தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் குறிப்பிட்டுள்ளன.
மனைவி தன்னைவிட்டுப் பிரிந்து வாழ்வதால், தங்களுக்கு பாலியல் உறவு இல்லை. அத்துடன் தங்களது மணவாழ்க்கை முற்றிலும் முறிந்துவிட்டது எனக் கூறி, விவாகரத்து கோரிய ஓர் ஆணுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது.
உடல் அல்லது உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் கணவன் அல்லது மனைவி நீண்ட நாட்கள் ஒருதலைபட்சமாக உடலுறவு கொள்ள மறுத்தால் அது ஒருவரை மனதளவில் துன்புறுத்துவதற்குச் சமமாகும்.
இதுபோன்ற சூழலில் ஒருவர் விவாகரத்து கோருவது நியாயமானதாகக் கருதப்படும் என்று 2007இல் ஒரு வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் உடலுறவை ஒருவர் எவ்வளவு காலத்திற்கு மறுக்கிறார் என்பது ஒவ்வொரு வழக்கின் உண்மைத் தன்மையைப் பொறுத்தது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
தனது மனைவி 5 மாதங்களில் தன்னுடன் 10-15 முறைதான் உடலுறவு கொண்டிருந்தார். அத்துடன் உடலுறவின்போது அவர் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஒரு ‘ஜடம்’ போல் இருப்பார் என்றும் விவாகரத்து கோரிய வழக்கில் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு விவாகரத்து அளித்த டெல்லி உயர் நீதிமன்றம், முதலிரவின்போது மனைவி உடலுறவுக்கு மறுத்தது கொடுமையான செயல் என்று இந்த வழக்கின் தீர்ப்பில் கூறியிருந்தது.
“உடலுறவு சார்ந்த பிரச்னைகளின் காரணமாக, அதன் புனிதத்தன்மை கெட்டு வருவதுடன், திருமண பந்தத்தின் உத்வேகமும் குறைந்து வருகிறது,” என்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போது நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும். “இதன் விளைவாக பாலின பாகுபாடற்ற திருமணங்கள் தொற்றுநோய் போலப் பரவி வருவதை யாராலும் தடுக்க முடியாது,” என்றும் நீதிபதி வேதனையுடன் கூறியிருந்தார்.
பாலியல் உறவு மறுக்கப்படுவதை காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரும் வாய்ப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்புக்கும் உள்ளது
அதேநேரம், தம்பதிக்கு இடையிலான உடலுறவில் ஆணோ, பெண்ணோ கடும் இன்னல்களை அனுபவித்தாலோ அல்லது வாழ்க்கைத் துணையின் நடத்தை சரியில்லை என்றாலோ மட்டுமே திருமணமான ஒரு வருடத்தில் விவாகரத்து கோர சட்டம் அனுமதிக்கிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வழக்கின் தீர்ப்பில் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
திருமணமான ஒரு வருடத்திற்குள் ஒரு தம்பதியில் ஆணோ, பெண்ணோ உடலுறவுக்கு மறுத்தாலோ, தனது இணையுடனான பாலியல் உறவில் இருந்து விலகிச் சென்றாலோ அதைக் கொடுஞ்செயலாகக் கருதி, அதன் அடிப்படையில் ஒருவர் விவாகரத்து கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
பாலியல் உறவு மறுக்கப்படுவதை காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரும் வாய்ப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்புக்கும் உள்ளது. ஆனாலும், இந்தப் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு விவாகரத்து கோருவது அதிகமாக ஆண்கள்தான் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
“பொதுவாக பெண்கள், பாலியல் உறவிலிருந்து தனது வாழ்க்கை துணை விலகிச் செல்வதை துன்பமாகக் கருதுவதில்லை. ஆனால் ஆண்கள் இதைத் தங்களுக்கு நிகழும் கொடுமையாகவே கருதுகின்றனர்,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த பெண்களின் உரிமைக்காகப் போராடும் வழக்கறிஞரான வீணா கௌடா.
மேலும், “பாலியல் உறவில் எழும் பிரச்னைகளைக் காரணங்காட்டி பெரும்பாலும் பெண்கள் விவாகரத்து கோருவதில்லை. அவ்வாறு அவர்கள் விவாகரத்து கோரினால், இந்தக் காரணத்துடன் கணவரால் கொடுமைப்படுத்தப்படுவது, கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போன்றவையும் கூடுதல் காரணங்களாக இருக்கின்றன,” என்றார் அவர்.
“உடலுறவு தொடர்பான பிரச்னைகளை காரணம் காட்டி, விவாகரத்து கோரப்படும் 10 வழக்குகளில் எட்டு அல்லது ஒன்பது வழக்குகள் ஆண்களால் தொடரப்படுவையாக உள்ளன” என்கிறார் வழக்கறிஞரும், பாலியல் பிரச்னைகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவருமான ஃபிளாவியா ஆக்னஸ்.
“உடலுறவு விவகாரத்தின் அடிப்படையில் விவாகரத்து கோர ஆண்களை அனுமதிப்பது பெண்களை புண்படுத்தும் செயலாகும். ஏனெனில் இதனால் விவாகரத்தை தவிர்ப்பதற்காக ஒரு பெண் தன் கணவருடன் கட்டாயம் உடலுறவு வைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்,” என்றும் கூறுகிறார் அவர்.
திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரது கணவர் அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது என்ற விதிவிலக்கும் இந்தியாவில் உள்ளது.
உடலுறவுக்கு வற்புறுத்துவது பாலியல் வன்கொடுமையா?
ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தினால் அது இந்து திருமணச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி துன்புறுத்தலாகக் கருதப்படும் என்பதுடன், இதுவே விவாகரத்துக்கான காரணமாகவும் இருக்கலாம்.
ஒரு ஆண் தனது மனைவியின் அனுமதியின்றி அவருடன் உடலுறவு கொண்டால், அது அவரை உடல் மற்றும் மனதளவில் கொடுமைப்படுத்துவதாகக் கருதப்படும் என்று 2021இல், கேரள உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரது கணவர் அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்ற விதிவிலக்கும் இந்தியாவில் உள்ளது. இது இல்லற பந்தத்தில் உடலுறவு என்பது ஒரு பெண்ணின் கடமையாகக் கருதப்படும் சிந்தனையுடன் தொடர்புடையது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
ஆனால், இந்த விதிவிலக்கை பெண்ணுரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
“இல்லற வாழ்வில் உடலுறவு என்பது பெண்களின் கடமையாகவும், ஆண்களின் உரிமையாகவும் பார்க்கப்படுகிறது. இதுவே தம்பதியாக இருந்தாலும், மனைவியின் விருப்பமின்றி கணவர் அவரை உடலுறவுக்கு வற்புறுத்தினால், அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட வேண்டும் என்று கூறுவதற்கு நீதிமன்றங்கள் தயங்குவதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன,” என்கிறார் நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், குடும்ப சட்ட நிபுணருமான சரசு எஸ்தர் தாமஸ்.
தம்பதிக்கு இடையிலான சம்மதமற்ற உடலுறுவை பாலியல் வன்கொடுமையாகக் கருதலாமா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில், திருமண பந்தத்தில் நிகழும் கட்டாய உடலுறவு பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படுவதில்லை. ஆனால் 498ஏ உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அதற்கு தண்டனை வழங்கப்படலாம்.
திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்வது சட்டவிரோதமா?
இதனிடையே, திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதமா என்ற கேள்விக்கு, இது சட்ட விரோதம் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
மேலும் இந்த உறவுமுறையைக் கட்டுப்படுத்த சட்டமும் இல்லை. இந்த உறவுமுறை திருமண பந்தமாக மாறாதபோதும், இதில் பல தருணங்களில் உடலுறவு ஒரு முக்கியப் பிரச்னையாக எழுப்பப்படுகிறது.
ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாத போதும், அவரை மணம் புரிந்துகொள்வதாக ஒரு ஆண், அப்பெண்ணிடம் பொய்யான வாக்குறுதி தரலாம்.
ஆனால், அந்த வாக்குறுதியை நம்பி அந்த ஆடவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதித்தால், அது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.