பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது: உத்தவ் தாக்கரே!!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று காலை நாக்பூர் சென்ற அவர், அங்கு இருந்து கார் மூலம் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்றார். பல்வேறு இடங்களில் தொண்டர்கள் உத்தவ் தாக்கரேயை உற்சாகமாக வரவேற்றனர். உத்தவ் தாக்கரே யவத்மால், வாசிம், அமராவதி, அகோலா, நாக்பூர் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். வாசிமில் உள்ள போக்ராதேவி கோவிலில் சாமி தாிசனம் செய்த அவர், பஞ்சாரா சமூக பிரநிதிகளையும் சந்தித்து பேசினார் யவத்மாலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:- 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. நானும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் முடிவை எடுத்து இருந்தோம்.
பா.ஜனதா அந்த முடிவை மதித்து இருந்தால், இன்று வேறு கட்சியினருக்கு அந்த கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. 2 கட்சிகளும் 2½ ஆண்டு முதல்-மந்திரி பதவியை நிறைவு செய்து இருக்கும். நான் மந்திராலயாவுக்கு கூட சென்றதில்லை என கூற பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது. பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும். எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. குப்பைகளை (அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது) பா.ஜனதா எப்படி கையாளுகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து யவத்மால் மாவட்டம் திக்ராஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:- ஒரு நாடு, ஒரே சட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் பா.ஜனதாவின் ஒரு நாடு, ஒரு கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பா.ஜனதாவுக்கு தாக்கரே இல்லாத சிவசேனா மட்டும் வேண்டும். பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது. பிரதமர் மோடியின் செல்வாக்கு மங்கிவிட்டது சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. அவர் ‘பஜ்ரங்பலி கி ஜெய்’ என சத்தமாக முழங்கினார். ஆனால் கடவுள் பதிலடி கொடுத்தார். பா.ஜனதா கர்நாடகாவில் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் பேசினார்.