;
Athirady Tamil News

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்னரே முடிக்கப்படும்: அறக்கட்டளை தகவல்!!

0

அயோத்தி ராமஜென்மபூமியில் ராம பிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் கோவில் கருவறையில் ராமபிரான் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் கோவிலை கட்டி வரும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ராம பிரானின் பிரமாண்ட கோவில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே தயாராகிவிடும். கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் கோவிலின் கருவறையில் ராம் லல்லா (குழந்தை ராமர்) பிரதிஷ்டை செய்யப்படுவார்’ என தெரிவித்தார். அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபா கூறியதாவது:- தரைத்தள கட்டமைப்பு தயாராக உள்ளது. தரை தளத்தில் 5 அரங்குகள் உள்ளன.

கோவிலின் ஈர்ப்பு மையமாக மண்டபம் இருக்கும். பிரதான மண்டபத்தில் கடவுளின் கொடி எப்போதும் ஏற்றப்பட்டிருக்கும். கோவில் கருவறை சுவர்கள் மற்றும் கூரைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தரை மற்றும் வெளிப்புற வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. கோவிலின் கீழ் தளத்தில் உள்ள 166 தூண்களில் சிலைகள் வடிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறையில் உள்ள 6 தூண்கள் வெள்ளை மார்பிள் கற்களாலும், வெளிப்புறத் தூண்கள் இளஞ்சிவப்பு கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தின் கட்டமைப்பும் வருகிற நாட்களில் தயாராகி விடும். மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-க்குள் முடிவடையும். 2024-ம் ஆண்டு சித்ரா ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும்.

அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம்லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது பக்தர்களுக்கு தெய்வீக அனுபவமாக இருக்கும். இவ்வாறு காமேஷ்வர் சவுபா கூறினார். மற்றொரு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், ‘மகர சங்கராந்திக்கு பிறகு பக்தர்கள் ராமபிரானை தரிசிக்கலாம். சுமார் 300 முதல் 400 பேர் ஒரே நேரத்தில் ஸ்ரீராமரை தரிசனம் செய்ய முடியும். கோவிலின் தரைத்தளத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்தாலும், தளம், மின்விளக்கு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளது’ என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.