வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை: ஆறாக மாறிய சாலைகள்- 12 பேர் பலி!!
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக டெல்லியில் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. எங்குபார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தன.
கெஜ்ரிவால் அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவிக்க, ஞாயிறுக்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை. மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். டெல்லி மாநிலம் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது.
இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். ஜூலை 15-ந்தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதச மாநிலத்தில் சுற்றுலா இடங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு காரணமாக கார் வெள்ளத்தில் அடித்துச் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது. பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மக்கள் சிக்கி தவித்தனர். பின்னர் மீட்புப்படையினர் அவர்கள் மீட்டனர். இந்திய வானிலை மையம் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. டெல்லியில் 58 வயது பெண் ஒருவர், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் வீடிந்து 6 வயது மகளுடன் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் சாலை துண்டிக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, சிமாயுர், லஹாயுல், ஸ்பிட்டி, சம்பா, சோலன் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரள மற்றும் கர்நாடகாவிலும் கனமழை பெய்துள்ளது. கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசரகோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.