காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மூவர்ணக் கொடியுடன் திரண்ட இந்தியர்கள் – நடந்தது என்ன?!!
கனடா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில், அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இதனிடையே, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் மூவர்ண கொடியுடன் அங்குள்ள இந்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 19ஆம் தேதி கனடாவின் வென்குவரில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு இந்திய அமைப்புகள்தான் காரணம் என்று கூறி காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஜூலை 8ஆம் தேதி பல்வேறு நாடுகளிலும் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
லண்டனின் உள்ள இந்திய தூதரகம் முன்பு மூன்றரை நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் அதற்கு மேலும் நீண்டது. அதே நேரத்தில் கனடாவின் டொரோன்டோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறைந்த அளவிலேயே ஆட்கள் காணப்பட்டனர்.
மூவர்ணக் கொடியுடன் இந்தியர்கள்
டொரோன்டோவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்ட நிலையில், அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் தேசியக் கொடியுடன் அங்குள்ள இந்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், இந்தியா வாழ்க போன்ற கோஷங்களை எழுப்பியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களில் ஒருவரான சுனில் அரோரா ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இங்கு காலிஸ்தானிகளை எதிர்கொள்ள தூதரகத்தின் முன் நிற்கிறோம். காலிஸ்தானியர்களின் முட்டாள்தனத்தை இங்கு நிறுத்த முயற்சிக்கிறோம், இந்தியா மற்றும் கனடாவின் ஒற்றுமைக்காக நாங்கள் இங்கு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய தூதர்கள் விக்ரம் துரைசாமி, சஷாங்க் விக்ரம் ஆகியோரின் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
கடந்த சில நாட்களாக, இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காணப்பட்டன.
லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு ஆதரவான பதாகைகளும் காணப்பட்டன. இதற்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில், நேற்றைய தினம் மழை காரணமாக 30 முதல் 40 நபர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது குறிப்பிடத்தக்க அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகர காவல்துறை செய்தி தொடர்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்திய தூதர் மீதான எந்தவொரு நேரடித் தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளவர்லி இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தார்.
சமீப மாதங்களில் உயிரிழந்த 4 முக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்களில் நிஜ்ஜாரும் ஒருவர்
முன்னதாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இந்திய தூதரகம் முன்பாக இருந்த மூவர்ணக் கொடியை கீழே இழுக்க முயற்சித்த போராட்டக்காரர்கள் கட்டிடத்தின் சுவரை உடைத்தனர். இச்செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கனடாவின் டொரோன்டோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குல்ஜித் சிங், “இந்திய விசாரணை அமைப்புகள் குற்றங்களைச் செய்தால், அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.
காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக குல்ஜித் சிங் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் அரசியல் பின்னணியை கொண்டது என்பதால், இது குறித்து கனேடிய போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வழக்கறிஞரான ஹர்கித் சிங் கூறுகிறார்.
தங்கள் மண்ணில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிஜ்ஜார் நடத்தியுள்ளார் என்று இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
இறந்தவர் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் தொழில்நுட்பம் – ‘இயற்கைக்கு விரோதமானது’ என விமர்சனம்
சமீப மாதங்களில் உயிரிழந்த 4 முக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்களில் நிஜ்ஜாரும் ஒருவர்.
கடந்த ஜூன் 15ஆம் தேதி பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள மருத்துவமனையில் கே.எல்.எஃப் தலைவர் அவதார் சிங் கண்டா மர்மமான முறையில் உயிரிழந்தார். விஷத்தால் அவரின் மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூரில் கடந்த மே 6ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய 2 நபர்கள் காலிஸ்தான் கமெண்டோ ஃபோர்ஸ் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்பவரை சுட்டுக்கொன்றனர்.
இதேபோல், லாகூரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி கே.எல்.எஃப் அமைப்பைச் சேர்ந்த ஹர்மீத் சிங் என்பவர் கொல்லப்பட்டார். உள்ளூர் குழுவால் இவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களின் மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதேவேளையில், இந்திய விசாரணை அமைப்புகள் இந்த மரணங்களுக்கு பின்னால் இருப்பதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் மரணத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அரசு மௌனமாகவே இருக்கிறது.