இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு – ஜன்னல் வழியே வெளியேறியவர் கண்டது என்ன?
இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேரூந்து ஒன்று வீழ்ந்து – நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர்.
பொலநறுவை மாவட்டம் – கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து, மன்னம்பிட்டி ‘கொட்டலிய’ பாலத்திலிருந்து விலகி ஆற்றில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
கதுருவெல பகுதியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த பேரூந்து, 7.45 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, அதில் பயணித்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் கூறினார். பேரூந்து புறப்பட்டு 15 நிமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆற்றில் பேரூந்து வீழ்ந்தவுடன் – தானே முதலில் தப்பித்ததாகவும், பேரூந்தின் ஜன்னல் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து தான் பயணித்தமையினால், தன்னால் பேரூந்தினுள் இருந்து வெளியேற முடிந்ததாகவும் மேற்படி இளைஞர் கூறினார்.
பேரூந்து விபத்துக்குள்ளானதை அடுத்து – கிராமத்திலுள்ளோர் ஆற்றில் இறங்கி பேரூந்தினுள் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆயினும் பயணிகளில் 10 பேர் மரணமடைந்துள்ளதாக பிபிசி தமிழிடம் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். காப்பாற்றப்பட்ட 41 பேர் பொலநறுவை மற்றும் மன்னம்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்னர் எனவும் பொலிஸார் கூறினார்.
இந்த நிலையில் குறித்த பேரூந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். . இதேவேளை மேற்படி பேரூந்தினுல் 60 பேர் வரை பயணித்திருக்கலாம் என தாம் நம்புவதாக தெரிவித்த மன்னம்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியொருவர், ஆற்றில் இன்னும் தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாகக் கூறினார்.
மன்னம்பிட்டி – கொட்டலிய பாலம் அமைந்துள்ள ஆற்றில் வாகனங்கள் வீழ்ந்து இதற்கு முன்னரும் பல தடவை விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
2011ஆம் ஆண்டு 07 பேருடன் பயணித்த வேன் ஒன்று, மேற்படி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 06 பேர் பலியாகினர். அதன்போது வாகனத்தை செலுத்தியவர் மட்டும் உயிர் பிழைத்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்தவர்களே அந்த விபத்தில் அப்போது உயிரிழந்தனர்.
குறித்த பாலம் அகலம் குறைந்ததாகவும், பாலத்தின் இரு பக்கத்திலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படாமையுமே, அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழக் காரணம் என, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். குறித்த பாலத்தின் வழியாக ஒரு திசையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் சென்ற பின்னரே, மறுதிசையிலிருந்து வரும் வாகனங்கள் பயணிக்க முடியும் வகையில், அந்தப் பாலம் மிகவும் குறுகலாக அமைந்துள்ளதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறுகின்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான முழு விபரங்கள் இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும் குறித்த பஸ்ஸில் பயணித்த அம்பாறை மாவட்டம் – ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய முஹம்மட் இஜாஸ் என்பவர் மரணமடைந்துள்ளார் என, அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவரின் அனுபவம்
கண்டியில் நடைபெற்ற ஊடக செயலமர்வொன்றில் கலந்து கொண்டு – மேற்படி பேரூந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சில இளைஞர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளனர்.
அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் வீடு திரும்பியுள்ளதாக அந்த பேரூந்தில் பயணித்த மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம். பவித்திரன் பிபிசி தமிழிடம் கூறினார். அவர் இன்று (10) அதிகாலை வீடு திரும்பினார்.
”அந்தப் பேரூந்து இருக்கைகள் அனைத்திலும் பயணிகள் இருந்தனர். பலர் நின்றுகொண்டு பயணித்தனர். விபத்து நடந்தபோது மிகவும் வேகமாக பேரூந்து பயணித்தது. அப்போது பாலத்தில் பேரூந்து மோதும் சத்தம் ‘சட சட’ வென தொடர்ச்சியாக் கேட்டது. என்ன என்று யோசிக்கும் போதே ஆற்றினுள் பஸ் விழுந்து புரண்டது. நானும் எனது அருகில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் பஸ் ஜன்னல் வழியாக வெளியேறினோம். அப்போது மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிள்ளையை காப்பாற்றி வீதிக்கு கொண்டு வந்தோம். எனக்கும் உடல் முழுக்க பலமான ‘அடி’ விழுந்திருந்தது. விபத்து நடந்த உடனேயே அந்தக் கிராம மக்கள் அங்கு வந்து, பேரூந்தில் இருந்தவர்களை காப்பாற்றத் தொடங்கினார்கள். அந்த இருளில் அவர்கள் எப்படி அவ்வளவு சீக்கிரம் வந்தார்கள் என்று தெரியவில்லை” என, அந்த விபத்து அனுபவத்தை பிபிசியுடன் பவித்திரன் பகிர்ந்து கொண்டார்.
இதனையடுத்து தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு சிசிக்சை பெற்றுக் கொள்ளாமல் வீடு திரும்பியதாகவும் பவித்திரன் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இந்த விபத்து தொடர்பில் உடனடி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார் என, ஆளுநர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாகிய பேரூந்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அதிகமானோர் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்துள்ளார்.
விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் கூறியுள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.