;
Athirady Tamil News

வாழ்க்கையை விழுங்கும் ஆன்லைன் விளையாட்டும், சமூக வலைத்தளமும்: பிரிட்டனில் அழிந்து வரும் ‘நிஜ’ உறவுகள்!!

0

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான ‘மனித’ தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான “லைஃப்சர்ச்” நடத்திய ஆய்வில் தெரிகிறது. அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது. 18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது. இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய ‘உண்மையான’ நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர். இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர். 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர். 3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு ‘சிறந்த நண்பர்’ இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் ‘இணை’ (Partner) என்று கூறியுள்ளனர்.

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது ‘சிறந்த நண்பர்’ என்று கூறியுள்ளார். டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு ‘உண்மையான நண்பர்கள்’ இல்லை என்று கூறியிருக்கிறார். “3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது” என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.