;
Athirady Tamil News

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 18-ந்தேதி ஆலோசனை!!

0

பாராளுமன்ற தேர்தல் 2024 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்.டி.ஏ.) தலைமை வகிக்கும் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அதேநேரம், வரும் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக, என்.டி.ஏ. கூட்டணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதீஷ்குமார் ஈடுபட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர். இந்த நிலையில் என்.டி.ஏ. கூட்டணியை பலப்படுத்துவதுடன், விரிவாக்க வேண்டியதும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில் என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) பங்கேற்கும் என்று தெரிகிறது.

இந்த 2 கட்சிகளின் வருகையால், 48 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் என்.டி.ஏ. கூட்டணி வலுவடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஓம்.பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் சமாஜ் கட்சி, முகேஷ் சஹானி தலைமையிலான விகாஷீல் இன்சான் கட்சியும் பங்கேற்க உள்ளன. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் (ராம்வி லாஸ்), பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும் என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்கும் என தெரிகிறது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயை சிராக் பாஸ்வான் நேற்று பாட்னாவில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, “பா.ஜ.க. கூட்டணியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்றார். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி தலைவருமான பசுபதிகுமார் பராஸ் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் மற்றும் சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளுடனும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.