;
Athirady Tamil News

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: 697 வாக்கு சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடந்தது!!

0

மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்லில் 61,636 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்த கும்பல் ஓட்டு பெட்டிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். சிலர் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து கொளுத்தினார்கள்.

அரசியல் கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள். இந்த நிலையில், வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து 697 வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.

அதிக அளவில் வன்முறை நடந்த முர்ஷிதா பாத் மாவட்டத்தில் அதிக பட்சமாக 175 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. மால்டா மாவட்டத்தில் 109 வாக்குச்சாவடிகளிலும், நாடியா மாவட்டத்தில் 89 வாக்குச்சாவடிகளிலும், கூச்பெகர் மாவட்டத்தில் 53 வாக்குச்சாவடிகளிலும், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 46 வாக்குச்சா வடிகளிலும், உத்தர் தினாஜ் பூர் மாவட்டத்தில் 42 வாக்குச்சாவடிகளிலும், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 36 வாக்குச்சாவடிகளிலும், பூர்பா மேதினியூர் மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகளிலும், ஹூக்ளி மாவட்டத் தில் 29 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் மாநில போலீசாருடன் 4 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், மறுவாக்குப்பதிவு நடை பெறும் வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழாத வண்ணம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.