திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரு பக்தருக்கு 4 லட்டு மட்டுமே விநியோகம்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்த பிறகு பக்தர்களின் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. ஆனால் வார இறுதி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததால் விவரிக்க முடியாத அளவு பக்தர்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் லட்டு கவுண்டர்கள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து லட்டு கவுண்டர்களிலும் லட்டு வழங்கப்பட்டாலும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.
இதனால் பக்தர் ஒருவருக்கு நான்கு லட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதலாக லட்டுக்களை வழங்க வேண்டும் என லட்டு வழங்கும் தேவஸ்தான ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி ஆணி வார ஆசானம் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் வி.ஐ.பி. பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 88,836 பேர் தரிசனம் செய்தனர். 35,231 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை பெற தேவஸ்தான அலுவலகத்தில் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 செலுத்தும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது. தினமும் 400 பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.