தடையை மீறி, டெல்லி மெட்ரோ நடைமேடையில் நடனமாடிய பெண்- சமூக வலைதளங்களில் கண்டனம் குவிகிறது!!
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் சமீபகாலமாக பயணிகளின் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கிய பின்னரும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்குள் வீடியோக்களை படம் பிடிக்க தடை விதித்தது. இந்நிலையில், தடையை மீறி ஒரு பெண் மெட்ரோ ரெயிலிலும், நடைமேடையிலும் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில், இளஞ்சிவப்பு நிற க்ராப் டாப் மற்றும் பிரவுன் நிற பாவாடை அணிந்த பெண் ரெயில் நிலைய நடைமேடையில் ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பொதுஇடத்தில் இப்படி ஆட எவ்வளவு தைரியம் வேண்டும் என ஒருவரும், விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ நிர்வாகம் இத்தகைய நபர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், மெட்ரோ சேவையை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஒரு பயனர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.