;
Athirady Tamil News

பால்தாக்கரே ஆதரிக்காவிட்டால் மோடியால் பிரதமர் ஆகி இருக்க முடியாது: உத்தவ் தாக்கரே!!

0

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அமராவதிக்கு சென்றார். அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- உலகின் நம்பர் ஒன் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிக்கொள்ளும் பா.ஜனதாவுக்கு மற்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது. நீங்கள் சிவசேனாவை கொள்ளையடித்தீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை கொள்ளையடித்தீர்கள்.

நாளை வேறு எதையாவது கொள்ளை அடிப்பீர்கள். நீங்கள் நாட்டுக்கு சொந்தமானதை விற்பனை செய்கிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறீர்கள். உலகின் மிகபெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஏன் இந்த நிலை வந்தது?. ஏனென்றால் உங்களிடம் அதிகாரத்தின் பெருமை இல்லை. தன்னம்பிக்கை இல்லை. பா.ஜனதா இவ்வளவு பெரிய மற்றும் பலம்பெற்ற கட்சியாக மாறியபிறகும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைக்கிறது. எனவே எதிராளிகளை இல்லாமல் செய்ய அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த பா.ஜனதாவை சிவசேனா தனது தோளில் சுமந்து மாநிலத்தில் அதன் அடித்தளத்தை விரிவுபடுத்த உதவியது. ஆனால் நீங்கள் எங்களை தற்போது அரசியலில் இருந்து ஒழித்துவிட பார்க்கிறீர்கள்.

இதுதான் உங்களின் இந்துத்வா. பாலாசாகேப் தாக்கரே உங்களை காப்பாற்றினார். இல்லையெனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை குப்பை தொட்டியில் வீசியிருப்பார். பாலாசாகேப் தாக்கரே தற்போதைய பிரதமருக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அவர் பிரதமராகி இருக்க முடியுமா?. இதை மற்றவர்களிடம் கேட்பதை விட உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். தற்போது தேர்தலில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் நோக்கிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினை கொண்டு வரப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்படும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை எழுப்பப்படும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கியது. பா.ஜனதா எதையும் செய்யவில்லை. ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அதை கொண்டுவர அவர்களுக்கு தைரியம் இல்லை. ராமர் கோவிலுக்கான போராட்டத்தின் போது இந்துத்வாவாதிகள் என்று கூறிக்கொண்டவர்கள் எலி பொந்தில் பதுங்கி இருந்தனர். ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம். ஆனால் கட்சியின் பெயரை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது. இதை யாரும் திருட விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.