;
Athirady Tamil News

கனமழை எதிரொலி- டெல்லியில் இன்று 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

0

டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலை எங்கும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழையால் பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கனமழை எதிரொலியால் நேற்று டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இன்று கன முதல் மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று 5ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிவுறுத்தலை தனியார் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்கு வழக்கம் போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் சனிக்கிழமை 153 மிமீ மழையும், திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை 107 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மழையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, 40 ஆண்டுகளில் டெல்லியில் இவ்வளவு கடுமையான மழை பெய்தது இதுவே முதல்முறை என்று கூறினார். கடந்த 1982-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் 169 மி.மீ., மழை பெய்துள்ளது. எனவே, இது வரலாறு காணாத மழை மற்றும் துரதிர்ஷ்டவசமாக நகரில் உள்ள வடிகால் அமைப்பு இதுபோன்ற தீவிர மழையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. நகரின் பல்வேறு பகுதிகளில் 680 பிடபுள்யுடி வடிகால் பம்புகள், 326 தற்காலிக பம்புகள் மற்றும் 100 நடமாடும் பம்புகளுடன் வேலை செய்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அல்லது டெல்லி மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.