போலீசிடம் இருந்து தப்பித்தவர் எமனிடம் சிக்கினார்- பிரீசரில் ஒளிந்ததால் உயிரிழந்த சோகம்!!
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஆளில்லாத ஒரு வீட்டின் ப்ரீசரில் இருந்து ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அந்த நபர் அவர் பெயர் பிராண்டன் லீ புஷ்மேன் (வயது 34) என்பதும் காவல்துறையினால் தேடப்பட்டவர் என்றும் தெரியவந்தது. போலீசாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியாக பிரீசரில் ஒளிந்திருக்கலாம் என தெரிகிறது.
அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டதால், தப்பிக்க முயன்று அந்த வீட்டின் பிரீசரில் ஒளிந்து கொண்டிருக்கிறார். ஆனால், அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கி இறந்திருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து அந்த வீட்டில் எந்த மின்சார வீட்டு உபயோக பொருட்களும் மின்சாரத்துடன் இணைக்கப்படாததால், அவரது உடல் மீட்கப்படும் போது சாதனம் இயங்காமல் இருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் அந்த வீடு ஆளில்லாமல் கிடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புஷ்மேன் ஒளிந்து கொண்ட ஃப்ரீசர் ஒரு பழைய மாடல் என்றும், அதனை வெளியே இருந்து திறக்க முடியுமே தவிர உள்ளே இருந்து திறக்க முடியாது என்றும் தெரிகிறது. அதனுள் செருகப்பட்ட ஒரு உலோக கம்பி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது தாழ்ப்பாளைத் திறக்கும் முயற்சியாக புஷ்மேனால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.