திருவனந்தபுரத்தில் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய 3 மீனவர்களின் கதி என்ன? தேடுதல் பணி 2-வது நாளாக நீடிப்பு!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை குறைந்துவிட்டது. ஆனால் இடுக்கி, கண்ணூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ந்தேதி வரை கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள் ளது. நாளை இடுக்கி, மலப் புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், நாளை மறுதினம் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட் டங்களுக்கும், 14-ந்தேதி இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடல் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம், காசர்கோடு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று பலமாக வீசுகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் முதல்பொழி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று வந்த படகு சூறைக் காற்றில் சிக்கியது. இதில் குஞ்சுமோன் (வயது 42), ராபின் (42), பிஜு (48), மற் றொரு பிஜு (55) ஆகிய 4 பேர் கடலுக்குள் விழுந்து மூழ்கினர். அவர்களில் குஞ்சு மோன் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2-வது நாளாக நடந்து வருகிறது. கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் மூழ்கிய மீனவர்களின் கதி 2 நாட்களாகியும் என்ன என்று தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.