;
Athirady Tamil News

இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும்: சந்திரயான்-3 விண்கலம் ஏவுதல் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. இதில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.

இதனால் சந்திரயான்-2 திட்டம் வெற்றி பெறவில்லை. இதையடுத்து சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டமைப்பு பணிகள் கடந்த வாரமே நிறைவடைந்த நிலையில் தொழில் நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மின்னூட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி அடிப்படையிலான வடிவமைப்பிற்கு பதிலாக சந்திரயான்-3 திட்டத்தில் தோல்வி அடிப்படையிலான வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:- சந்திரயான்-3 விண்கலம், அனைத்து வகையிலும் வெற்றிகரமாக திட்ட மிட்டபடி ஏவப்பட்டாலும், நிலவில் தரையிறங்குவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. அந்த திட்டம் முழுவதும் வெற்றியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

ஆனால் தரையிறங்குவதில் தோல்வியடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தை முழுவதும் தோல்வியின் அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். சென்சார் செயலிழப்பு, இயந்திர செயலிழப்பு, கணக்கீடு தோல்வி என பல தோல்விகளை நாங்கள் பார்த்தோம். எனவே தோல்வி எதுவாக இருந்தாலும், அது தேவையான வேகத்திலும், குறிப்பிட இடத்திலும் தரையிறங்க வேண்டும் என்று விரும்புகிறோம். சரியாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, குறிப்பிட்ட இடத்தில் இறங்க முடியாவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என தோல்விகள் எந்தெந்த வகையில் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

தோல்வியின் அடிப்படையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. முந்தைய விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். தற்போது எந்த இடத்திலும் தரை இறங்கும் வகையில் திட்ட மிட்டுள்ளோம். தரையிறங்கும் பகுதியை 500 மீட்டருக்கு 500 மீட்டரிலிருந்து 4 கிலோ மீட்டருக்கு 2.5 கிலோ மீட்டராக உயர்த்தி உள்ளோம். இதனால் எங்கும் தரையிறங்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்டுப்படுத்ததாது. சந்திரயான்-3 விண்கலம் அதிக எரிபொருளை கொண்டுள்ளது. விக்ரம் லேண்டரில் தற்போது கூடுதல் சோலார் பேனல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.