;
Athirady Tamil News

மம்தா பானர்ஜி கட்சி அதிக இடங்களில் முன்னிலை- மீண்டும் செல்வாக்கை நிரூபித்த திரிணாமுல் காங்கிரஸ்!!

0

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 22 ஜில்லா பரிஷத் 9,730 பஞ்சாயத்து சமிதி 63,229 கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட மொத்தம் 73,887 பதவிகளுக்கான ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சி தொண்டர்கள் இடை யே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் சிறுவன் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு நாளில் வன்முறை சம்பவங்களை தடுக்க 70 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 65 ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனாலும் இதனை மீறி தேர்தல் நாளில் வரலாறு காணாத வகையில் கலவரம் மூண்டது. வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு, ஓட்டுச்சீட்டுகள் தீ வைத்து எரித்தல், வாக்குச் சாவடி சூறை , துப்பாக்கி சூடு, மறியல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பாரதியஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொண்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பலியானார்கள். இந்த வன்முறைக்கு இடையிலேயும் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினார்கள். இதனால் சனிக்கிழமை நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80.71 சதவீத ஓட்டுகள் பதிவானது. வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கு உள்ளிட்ட 696 வாக்குச்சாவடி களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடந்தது.

சில இடங்களில் இந்த மறுவாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பிய போதிலும் 69.85 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. 22 மாவட்டங்களில் உள்ள 339 மையங்களில் இந்த ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இன்று காலை நிலவரப்படி மேற்கு மெதினிபூரில் உள்ள 211 கிராம பஞ்சாயத்துகளில் 26 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அவுராவுக்கு உட்பட்ட 157 பஞ்சாயத்துகளில் 29 இடங்களில் அக்கட்சி முன்னணி பெற்று உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளனர். சில இடங்களில் மற்ற கட்சிகளை விட அக்கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளனர்.

பாரதிய ஜனதா, காங்கிரஸ். கம்யூனிஸ்டு கட்சிகள் பின் தங்கி உள்ளன. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. இந்த தேர்தலில் ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முன்னிலை நிலவரம் மட்டுமே வந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிய இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.பட்டாசுகள் வெடித்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒட்டு எண்ணிக்கையின் போது சில பகுதியில் அசாம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்தது. டைமண்ட் ஹர்பர் பகுதியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த குண்டு வீச்சில் யாரும் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்காள மாநிலத்தை பொறுத்தவரை வங்க புலி என அழைக்கப்படும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். அவரை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்பதில் பாரதியஜனதா வெறித்தனமாக உள்ளது. இதன் காரணமாக தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டமாக கருதப்பட்டதால் யார்? வெற்றி பெறுவார்கள் என்பதில் நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றியது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.. ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து பதவிகளில் 90 சதவீத இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. பாரதியஜனதாவால் 2-வது இடத்தை தான் பிடிக்க முயன்றது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க தொண்டர்கள் இருந்தனர். ஆனால் இன்று நடந்த தேர்தல் முடிவு அவர்கள் கனவை தகர்த்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.