யுக்ரேனுக்கு அமெரிக்கா ‘கொத்துக்குண்டுகள்’ கொடுப்பதை நட்பு நாடுகளே எதிர்ப்பது ஏன்? அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன? !!
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரில் யுக்ரேனுக்கு உதவ, கொத்துக் குண்டுகளை அனுப்பிவைக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதற்கு பல நட்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சர்ச்சைக்குரிய கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்புவதை அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. அதிபர் ஜோ பைடன் இதை “மிகவும் கடினமான முடிவு” என்று தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பும் அமெரிக்காவின் முடிவை எதிர்ப்பதாகத் தெரிவித்தன.
கொத்துக் குண்டுகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் 100க்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த குண்டுகள், தாக்குதல் நடத்தும் இலக்கில் பரந்த அளவுக்கான பகுதியில் கண்மூடித்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்லக்கூடிய சிறிய குண்டுகளை பாய்ச்சுகின்றன.
இது போன்ற குண்டுகள் ஈரப்பதம் மிக்க அல்லது மென்மையான சமவெளிகளில் விழும் போது அப்போதே வெடிப்பதில்லை. தாக்குதல் நடந்த பின் ஏதோ ஒருநாளில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பல தசாப்தங்களுக்குக் கூட இவை வெடிக்காமல் கிடந்து பின்னர் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. இது போல் எத்தனை சதவிகித குண்டுகள் வெடிக்காமல் பின்னர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த விவரங்கள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.
800 மில்லியன் டாலர் (£626 மில்லியன்) மதிப்புள்ள இராணுவ உதவிகளின் ஒரு பகுதியாகவே இந்த கொத்துக் குண்டுகள் யுக்ரேனுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன என நட்பு நாடுகளிடம் தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளியன்று CNNக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
“யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்பும் முடிவை எடுக்க ‘சிறிது காலம்’ பிடித்ததாக” அதிபர் பைடன் கூறினார். ஆனால் “யுக்ரேனியர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதால்” கொத்துக் குண்டுகளை அனுப்ப அவர் முடிவெடுத்துள்ளார்.
கார்கிவ் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தின் அருகே க்ளஸ்டர் குண்டுகளால் தாக்கப்பட்ட காரில் உள்ள அடையாளங்கள்
அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு
இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மனித உரிமைக் குழுக்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. கொத்துக் குண்டுகள் “மோதல் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் பொதுமக்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், யுக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க கொத்துக் குண்டுகள், ஏற்கனவே இப்போரில் ரஷ்யா பயன்படுத்திய கொத்துக் குண்டுகளை விட ஆபத்து குறைவானவை என்றார்.
ஆனால் அமெரிக்காவின் மேற்கத்திய நட்பு நாடுகள் சில இந்த முடிவுக்கு சனிக்கிழமையன்று எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்காவின் முடிவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேட்ட போது, கொத்துக் குண்டுகளை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 123 நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும் என்றும், இந்த உடன்படிக்கை, கொத்துக் குண்டுகளைத் தயாரிப்பதையோ, பயன்படுத்துவதையோ தடை செய்கிறது என்றும் தெரிவித்தார்.
லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அதிபர் பைடன் நேற்று பிரிட்டன் பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்திப்பதற்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு மாநாட்டை நடத்த அதிகமாக அழுத்தம் கொடுத்து வந்தவர்களில் ஒருவரான நியூசிலாந்து பிரதமர், ரிஷி சுனக்கை விட அதிகமாக அமெரிக்காவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிறிஸ் ஹிப்கின்ஸ் இது குறித்து கூறுகையில், “இந்த வகை ஆயுதங்கள் கண்மூடித்தனமானவை. அவை அப்பாவி மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை நீண்டகால விளைவையும் ஏற்படுத்தக்கூடும்,” என்றார். யுக்ரேனில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு நியூசிலாந்தின் எதிர்ப்பை வெள்ளை மாளிகைக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஸ்பெயின் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, யுக்ரேனுக்கு சில வகையான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை அனுப்பக் கூடாது என்பதில் தனது நாடு “உறுதியான நிலையை” கடைபிடிப்பதாகத் தெரிவித்தார்.
“கொத்துக் குண்டுகள் இல்லாமலேயே யுக்ரேனுக்குத் தேவையான நியாயமான உதவிகளை அளிப்பது தான் தற்போதைய தேவை. யுக்ரேன் நாடு கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பெரிய குண்டில் இருந்து வெளிப்பட்டு பின்னர் சிதறி பரந்த நிலப்பரப்பைத் தாக்கும் குண்டுகள் தான் கொத்துக் குண்டுகள்
சில சமயங்களில் பல ஆண்டுகள் வரை வெடிக்காமல் கிடக்கும் கொத்துக் குண்டுகள் குழந்தைகளுக்கு பயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக அவற்றின் தாக்கம் குறித்து கனடா அரசு கவலை கொண்டுள்ளது.
கொத்துக் குண்டுகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், கொத்துக் குண்டுகள் தொடர்பான மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் கனடா கூறியது. “அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்,” என்று கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. அதே சமயம் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளும் போரின் போது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் தற்போதைய நிலையைப் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஜெர்மனி, யுக்ரேனுக்கு ஒரு போதும் இந்த வகையான ஆயுத உதவிகளை அளிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. கொத்துக் குண்டுகளுக்கு எதிரான உடன்படிக்கையில் ஜெர்மனியும் கையெழுத்திட்டுள்ளது.
“எங்கள் அமெரிக்க நண்பர்கள் கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அளிப்பது குறித்த முடிவை இலகுவாக எடுக்கவில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட் பெர்லினில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே, கொத்துக் குண்டுகள் எதிரிகளின் பாதுகாப்புக் கோடுகளை உடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், நகர்ப்புறங்களில் அவை பயன்படுத்தப்படாது என்றும் யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்த கொத்துக் குண்டுகளில் உடனடியாக வெடிக்காத குண்டுகளே எதிர்காலத்தில் எப்போதாவது மிகப்பெரும் ஆபத்தாக இருக்கும் என்ற நிலையில், ஒரு சதவிகிதத்துக்கும் அதிகமான குண்டுகள் இப்படி வெடிக்காமல் போகும் ஆபத்து இருக்கிறதென்றால், அந்த குண்டுகளைத் தயாரிக்க அமெரிக்க சட்டங்கள் இடம் தருவதில்லை. அந்த சட்டங்களை அதிபர் ஜோ பைடன் மீற முடியாது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்காவிடம் உள்ள கொத்துக் குண்டுகள் 2.5 சதவிகித அளவுக்கு உடனடியாக வெடிக்காமல் போகும் நிலை இருப்பதாகவும், ஆனால் ரஷ்யாவில் உள்ள கொத்துக் குண்டுகள் 30 முதல் 40 சதவிகிதம் வரை வெடிக்காமல் போகும் ஆபத்து நிறைந்தவை என்றும் தெரிவித்தார்.
ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச சிவில் சமூக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அமெரிக்காவின் சமூக அமைப்பு ஒன்று, இந்த கொத்துக் குண்டுகள் “இன்றும், இன்னும் பல தசாப்தங்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்,” என்று கூறியது.
ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் இது குறித்து விமர்சித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஐ.நா. பிரதிநிதி ஒருவர், “இதுபோன்ற வெடிகுண்டுகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், எந்த இடத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது” என்று கூறினார்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த நடவடிக்கையை “விரக்தியின் வெளிப்பாடு” மற்றும் “யுக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை மிகவும் விளம்பரப்படுத்திய அமெரிக்கா, தனது தோல்வியின் முன்பாக ஒரு இயலாமையில் தவிப்பதன் வெளிப்பாடு,” என்று விவரித்தார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவாவும், கொத்துக் குண்டுகளை பொறுப்புடன் பயன்படுத்துவோம் என்ற யுக்ரேனின் உறுதிமொழிகள் “எந்த வித மதிப்பும் இல்லாதவை” என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னர் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் யுக்ரேனில் பினாமி போர் நடத்திவருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
யுக்ரேன் நாட்டின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் தென்கிழக்கு ஜபோரிஜியா பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய ரஷ்ய எதிர்ப்புத் தாக்குதல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
கடந்த வாரம், யுக்ரேனின் இராணுவத் தளபதி வலேரி ஜலுஷ்னி பேசிய போது, போதிய ஆயுத பலம் இல்லாததால் எதிர்த்தாக்குதல்கள் தாமதமடைந்ததாகவும், மேற்கத்திய நாடுகள் உறுதியளித்த அளவுக்கான ஆயுதங்களை மிக மெதுவாக வழங்குவதாகவும் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “சரியான நேரத்தில் மிகவும் தேவையுள்ள” இராணுவ உதவிகளை அளிக்க முடிவெடுத்ததற்கு அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.
யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அளிக்க முடிவெடுத்ததிலிருந்து அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளெல்லாம் ஒவ்வொருவராக அந்நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கொத்துக் குண்டுகளைத் தயாரிப்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்யும் 2008ம் ஆண்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை உறுதியாகப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா அதையும் தாண்டி கொத்துக் குண்டுகள் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கும்- குறிப்பாக குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அந்நாட்டின் அரசு ஒரு அறிக்கை வெளியிடும் அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
யுக்ரேனுக்கு இந்த ஆயுதங்களை வழங்கக்கூடாது என ஸ்பெயின் வலியுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்வதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இருப்பினும் இது போன்ற ஆயுதங்களை அந்நாட்டு அரசு யுக்ரேனுக்கு அளிக்காது என்றும் கூறியுள்ளது.
இப்போரில் அதிக எண்ணிக்கையில் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்திய ரஷ்யா கூட, அவற்றை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வகையான குண்டுகளைப் பயன்படுத்தும் போது பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலப்பகுதி குப்பை மேடாக மாறும் என அந்நாடு தெரிவித்துள்ளது.
ஆனால் நேட்டோ ஐரோப்பிய கூட்டமைப்பின் முன்னாள் துணை தளபதியான ஜெனரல் சர் ரிச்சர்ட் ஷிர்ரெஃப் அமெரிக்காவின் முடிவுகளை ஆதரித்துள்ளார். போரில் ரஷ்யாவை எதிர்த்து கடுமையாகப் போராட இந்த ஆயுதங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மேற்குலக நாடுகள் போதுமான ஆயுதங்களை யுக்ரேனுக்கு அளித்திருந்தால் இப்போது கொத்துக் குண்டுகள் வழங்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றார் அவர்.