;
Athirady Tamil News

செமி கண்டக்டர் உற்பத்தி: ஃபாக்ஸ்கான் விலகலால் இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பின்னடைவா?

0

ஆப்பிள் ஐஃபோன் உதிரிபாக தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் சுரங்கத் தொழிலில் கோலோச்சும் வேதாந்தாவுடன் இணைந்து 1.6 லட்சம் கோடி ரூபாயில் சிப் தயாரிக்கும் ஆலையை அமைக்க செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளது.

பிரதமர் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து சிப் தயாரிக்கும் ஆலையை நிறுவப் போவதாக அறிவித்த ஓராண்டிற்குள்ளாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்பத்துறைக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், உலகின் சிப் தயாரிக்கும் மையமாக மாற வேண்டும் என்ற நாட்டின் லட்சியத்தில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

“திட்டப் பணிகள் எதிர்பார்த்தபடி வேகமாக நடக்கவில்லை என்பதை இரு தரப்புமே ஒப்புக் கொண்டுள்ளளன,” என்று தைவானை தலைமையிடமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“சவாலாக இருக்கும் சிக்கல்களை சுமூகமாக தீர்க்க முடியவில்லை. அத்துடன், திட்டத்திற்கு தொடர்பில்லாத வெளிப்புற பிரச்னைகளும் இருக்கின்றன” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

வேதாந்தாவுடன் பரஸ்பர ஒப்புதலின் பேரில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமையன்று பிபிசியிடம் பேசிய ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்தது. இதனால், இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளவிருந்த திட்டத்தின் முழு உரிமையும் வேதாந்தா நிறுவனத்திற்கு சென்றுள்ளது.

இந்த திட்டத்தில் இருந்து வெளியேறினாலும் அரசின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூறியுள்ளது.

அதேநேரத்தில், டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா நிறுவனமோ, “இந்தியாவின் முதல் சிப் ஆலையை நிறுவுவதில் கூட்டு சேர பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளது.

“ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு, இந்தியாவின் குறைக்கடத்தி (semiconductor) தயாரிக்கும் லட்சியத்தில் ஒரு பின்னடைவாக இருக்கும்,” என்கிறார் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான ஆல்பிரைட் ஸ்டோன்பிரிட்ஜ் குழுமத்தைச் சேர்ந்த பால் ட்ரையோலோ.

“சரியான தொழில்நுட்ப கூட்டாளி அமையாததும், இரு நிறுவன கூட்டில் உள்ள குறைபாடுகளுமே இதற்கு காரணமாக தெரிகிறது,” என்கிறார் அவர்.

மேலும் பேசுகையில், “பெரிய அளவில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை உருவாக்கி நிர்வகிக்கும் அனுபவம் இரு நிறுவனங்களுக்குமே இல்லை,” என்றார்.

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முடிவு இந்தியாவின் குகைக்கடத்தி(semiconductor) இலக்குகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.

ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் நாட்டில் “மதிப்பு வாய்ந்த முதலீட்டாளர்கள்” என்றும் “இனி அவை தனித்தனியே இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடரும்” என்றும் சந்திரசேகர் கூறினார்.

உள்நாட்டிலேயே சிப் தயாரிப்பை ஊக்குவிக்க புதிய உத்திகளை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

வெளிநாட்டு சிப் உற்பத்தியாளர்களை நம்பியிருக்கும் நிலையை குறைத்து, அத்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாயில் நிதியையும் இந்திய அரசு உருவாக்கியது.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமர் மோதியின் முதன்மையான ‘மேக் இன் இந்தியா’ திட்டம், சீனாவுக்கு போட்டியாக உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், பல நிறுவனங்கள் இந்தியாவில் குறைக்கடத்தி தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.

கடந்த மாதம், அமெரிக்க மெமரி சிப் நிறுவனமான மைக்ரான், இந்தியாவில் குறைக்கடத்தி (semiconductor) அசெம்பிளி மற்றும் பரிசோதனை வசதியை உருவாக்க 825 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்வதாகக் கூறியது.

அதற்கான ஆலைக் கட்டுமானப் பணிகள் குஜராத்தில் இந்த ஆண்டு தொடங்கும் என்றும் மைக்ரான் நிறுவனம் கூறியிருந்தது. இந்தத் திட்டமானது நேரடியாக 5,000 பேருக்கு வேலை தருவதோடு, மறைமுகமாக 15,000 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.