நேட்டோ: ரஷ்யாவை எதிர்கொள்ள ‘புதிய திட்டம்’ தயார் – யுக்ரேன் கேட்டது கிடைக்குமா?
நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வது குறித்து நேட்டோ நடத்தும் மிக விரிவாக ஆலோசனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேட்டோ என்றால் என்ன?
நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.
1949-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை தொடங்கின. அதில் தற்போது 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர அவை ஒப்புக் கொண்டுள்ளன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தை தடுப்பதே இதன் உண்மையான நோக்கமாக இருந்தது.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் நேட்டோவில் இணைந்தன.
நேட்டோவில் சேரும் யுக்ரேனின் விருப்பத்தை ரஷ்யா(முந்தைய சோவியத் ஒன்றியத்தின் அங்கம்) கடுமையாக எதிர்த்தது. தனது எல்லைக்கு மிக நெருக்கமாக நேட்டோவைக் கொண்டு வந்துவிடும் என்பது ரஷ்யாவின் அச்சம்.
ஆனாலும், கடந்த ஏப்ரலில் பின்லாந்தை சேர்த்ததன் மூலம் ரஷ்யாவின் மற்றொரு எல்லைக்கு நேட்டோ வந்து சேர்ந்திருக்கிறது.
நேட்டோவில் ஏதேனும் ஒரு நாட்டை ரஷ்யா தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்பதற்கு நேட்டோ கமாண்டர்கள் புதிய திட்டம் வகுத்துள்ளனர்.
ஆர்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக், மத்திய ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதி ஆகிய 3 பிராந்தியங்களில் ஏதேனும் ஒன்றை ரஷ்யா தாக்கும் பட்சத்தில் படைகள் எங்கே செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான துல்லியமான திட்டங்கள் அதில் உள்ளன.
நேட்டோவிடம் தற்போது 40 ஆயிரம் துருப்புகள் தயார் நிலையில் உள்ளன. 30 நாட்களுக்குள் 3 லட்சம் துருப்புகள் தயாராவதற்கான திட்டங்கள் குறித்து லித்துவேனியாவில் நடக்கும் இந்த நேட்டோ மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நேட்டோவின் விரிவான திட்டம் இது என்கிறார் ராயல் யுனைட்டெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் துணைத் தலைவர் மால்கல்ம் சால்மர்ஸ்.
“சோவியத் ஒன்றியம் சிதைந்ததும் பெரிய போர் ஆபத்து கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது” என்கிறார் அவர்.
“ஆனால், 2014-ம் ஆண்டு கிரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதும், தற்போதைய யுக்ரேன் போரும் அச்சுறுத்தல் மீண்டும் உண்மையாகி இருப்பதை, குறிப்பாக பால்டிக் குடியரசுகளுக்கு உணர்த்தியுள்ளன.” என்று அவர் கூறுகிறார்.
2008-ம் ஆண்டு யுக்ரேன் எதிர்காலத்தில் தங்கள் அமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்று கூறிய நேட்டோ அமைப்பு, விரைவாக அதனை செயல்படுத்த வேண்டும் என்ற யுக்ரேனின் வேண்டுகோளை அண்மையில் நிராகரித்துவிட்டது.
நேட்டோ சட்டதிட்டங்களின் 5-வது பிரிவில் ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால் அதன் பாதுகாப்புக்கு மற்ற நாடுகள் வர வேண்டும் என்று கூறுகிறது.
ஒருவேளை யுக்ரேன் சேர்ந்திருந்தால், நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போரை அறிவிக்க வேண்டியிருந்திருக்கும்.
யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் எவ்வாறு உதவுகின்றன?
பரந்த நிலப்பரப்பில் கடும் சேதத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தான கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ரஷ்யாவுக்கு எதிரான பதில் தாக்குதலில் தங்களது படைகளுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று யுக்ரேன் கூறியுள்ளது.
எப்படி பார்த்தாலும், இது ஒரு சர்ச்சையான நடவடிக்கைதான். அப்பாவி பொதுமக்களுக்கு அது தரும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளை அந்த குண்டுகளை தடை செய்திருக்கின்றன.
சக்தி வாய்ந்த 31 ஆப்ராம் டாங்குகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா தருகிறது. பிரிட்டன் தன் பங்கிற்கு 14 சேலஞ்சர்-2 ரக டாங்குகளை கொடுக்கிறது. ஜெர்மனி 18 லெப்பர்ட்-2 டாங்குகளை அனுப்பியுள்ளது. மற்ற நேட்டோ நாடுகளும் டஜன்கணக்கில் அனுப்பியுள்ளன.
போர்க்களத்தில் ரஷ்ய துப்புகளின் நிலையையும் தாண்டி தாக்குதல் நடத்தக் கூடிய ஹிமார்ஸ் ரக ஏவுகணை அமைப்புகளை யுக்ரேனுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்துள்ளன.
யுக்ரேன் வான் எல்லைக்குள் நுழையும் ரஷ்யாவின் குரூயிஸ் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நேட்டோ நாடுகள் கொடுத்துள்ளன.
2022-ம் ஆண்டு யுக்ரேன் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகளைன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியதில் அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்த டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களான ஜாவ்லின், ந்லா ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு.
அதேநேரத்தில், நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. அவற்றைப் பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பில் யுக்ரேன் தாக்குதல் நடத்தினால், அது ரஷ்யா – நேட்டோ இடையே நேரடி மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்பதே அதற்குக் காரணம்.
அதே காரணத்திற்காகத்தான், யுக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பவோ, விமானப் படைகளைப் பயன்படுத்தி, ‘விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட’ பிராந்தியமாக அறிவிக்கவோ நேட்டோ நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
அதேநேரத்தில் யுக்ரேன் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அமெரிக்க தயாரிப்பான எப்-16 போர் விமானங்களை இயக்க யுக்ரேன் விமானிகளுக்கு நேட்டோ நாடுகள் பயிற்சி அளித்து வருகின்றன.
நடுநிலை வகித்து வந்த பின்லாந்து 2023-ம் ஆண்டு ஏப்ரலில் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது.
ரஷ்யாவுடன் 1,340 கி.மீ. தூர எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. பின்லாந்தின் இணைப்பால், நேட்டோவுக்கு கூடுதலாக 2.57 லட்சம் துருப்புகள் கிடைத்துள்ளன.
பின்லாந்துடன் ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்தது.
நேட்டோவின் மற்ற நாடுகள் அனைத்தும் ஸ்வீடனின் வேண்டுகோளை அங்கீகரித்தாலும் துருக்கி, ஹங்கேரி ஆகிய இரு நாடுகளும் இன்னும் அதனை ஏற்கவில்லை.
புரோ குர்திஸ்தான் இயக்கத்தினர் உள்ளிட்ட துருக்கி அரசுக்கு எதிரானவர்களை நாடு கடத்த ஸ்வீடன் மறுப்பதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது.