லித்துவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு… உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது தீவிரப்படுத்துமா?
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இன்றும் நாளையும் நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கான போர் தொடங்கி 500 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த போர் உலகம் முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றும் நாளையும் லித்துவேனியா தலைநகரான வில்னிஸ் நகரில் நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ஸ்வீடன் நாடுகளை நேட்டோவில் இணைப்பது குறித்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல உக்ரைனுக்கு க்ளஸ்டர் வகை வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது குறித்தும் அதை பயன்படுத்த உக்ரைன் இசைவு தெரிவித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. ஆண்டு கணக்கில் உக்ரைன், ரஷ்ய போர் நீடிப்பது பொருளாதார ரீதியில் அனைத்து உலக நாடுகளுக்கும் நல்லதல்ல என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாடு போரை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது போரை மேலும் தீவிரமாக்குமா என்பது குறித்து உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.