;
Athirady Tamil News

தைவானை சுற்றி போர் விமானங்கள், கப்பல்கள்: சீனாவின் அடாவடிச் செயலால் பதற்றம்!!

0

சீனாவின் போர் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சுயாட்சி செய்து வரும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் உள்ளிட்ட போர் விமானக்குழுவை அனுப்பி அச்சுறுத்தியுள்ளது.

சீன ராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அனுப்பியுள்ளது. புதன்கிழமை காலை முதல் மதியம் வரை, சீன ராணுவம் மேலும் 30 விமானங்களை பறக்கவிட்டிருக்கிறது. அவற்றில் ஜே-10 மற்றும் ஜே-16 போர் விமானங்களும் அடங்கும். இவற்றில் 32 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் (தீவுக்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் ஒரு இடைப்பகுதியாக கருதப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லை) நடுப்பகுதியைக் கடந்து பறந்தது. பின்னர், மேலும் 23 விமானங்கள் நடுக்கோட்டைக் கடந்தன. தைவான் நாட்டு ராணுவம், படையெடுப்புகளுக்கு எதிராக தன்னை காப்பதற்கான தயார்நிலை பயிற்சிகளை மேற்கொள்ளும் வருடாந்திர ஹான் குவாங் (Han Guang) பயிற்சியில் ஈடுபடவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தைவானில் பொதுமக்கள் வான்வழி போர் தாக்குதல்களின் போது பாதுகாப்பாக வெளியேறவும், இயற்கை பேரழிவுகளின் போது தங்களை காத்து கொள்ளவும், “வான்’ஆன்” (Wan’an) பயிற்சிகள் எனும் வழிமுறைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவார்கள். வரும் வாரங்களில் தைவானில் இது நடக்க இருக்கிறது. இந்த பின்னணியில், சீனாவின் அத்துமீறல் நடந்திருக்கிறது.

தைவானுக்கு முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபத்திய ஆண்டுகளில், தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தைவானை நோக்கி அனுப்பும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம், கடற்படை கப்பல்களையும், டிரோன்களையும் தைவானுக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு சீனா அனுப்பி வைத்தது. நேற்றைய மற்றும் இன்றைய ராணுவ வெளிக்காட்டுதல்களில் சீனா, தனது H-6 ரக குண்டுவீச்சு விமானங்களை தைவானின் தெற்கே தீவைக் கடந்து, பின் சீனாவின் தெற்கு கடற்கரையை நோக்கி திருப்பியது. முன்னாள் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகள், சீனாவால் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தைவான் தீவின் மீது சீனா ஏவுகணைகளை செலுத்தியது. சீனாவின் ராணுவ பயிற்சிகளால், தைவான் ஜலசந்தியின் வர்த்தக பாதைகள் சீர்குலைந்து, விமானங்கள் தங்கள் வான்பாதையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது. ஏப்ரல் மாதம், தைவான் ஜனாதிபதி, ட்ஸாய் இங்-வென் உடன் தற்போதைய அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியின் சந்திப்பின் எதிரொலியாக தைவானை சுற்றியுள்ள ஆகாய மற்றும் கடல் பகுதிகளில் பெரிய அளவிலான போர் தயார்நிலை பயிற்சிகளையும் சீன ராணுவம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.