3ம் உலகப்போர் நெருங்குகிறதா? ரஷியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை!!
ரஷிய-உக்ரைன் போர் 504வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேட்டோவின் 2-நாள் உச்சி மாநாடு லிதுவேனியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், நேட்டோவிடமிருந்து உக்ரைனுக்கு இது குறித்து எந்த அழைப்பும் வரவில்லை. இருப்பினும், போரில் உக்ரைனுக்கு உதவுவதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். இந்த உதவி 3வது உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் என சக்திவாய்ந்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளரான டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். மாநாட்டின் முதல் நாள் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மெத்வதேவ், “மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதன் மூலம், உக்ரைனில் தன் இலக்குகளை அடைவதில் இருந்து ரஷியாவை தடுக்க முடியாது. ரஷியாவிற்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை. முற்றிலும் பைத்தியம் பிடித்த மேற்கத்திய நாடுகளால் வேறு எதையும் செய்ய முடியாது.
மூன்றாம் உலகப்போர் நெருங்கி வருகிறது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை அதே இலக்குகளுடன் தொடரும்” என்று டெலிகிராமில் மெத்வதேவ் பதிவிட்டுள்ளார். 2008-2012 வரை ரஷிய அதிபராக இருந்தபோது தாராளவாத நவீனத்துவவாதியாக தன்னை காட்டி கொண்ட மெத்வதேவ், சமீப காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். உக்ரைனில் உள்ள புது நாஜி குழு (விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அரசாங்கம்) நேட்டோவில் சேர்வதை தடுக்கும் ரஷியாவின் இலக்கு இப்போது, சாத்தியமற்றது. உக்ரைனிய அரசாங்கத்தை அகற்றுவது இப்போது அவசியமாகிறது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அதை வலியுறுத்தினோம், என கூறியிருக்கிறார் மெத்வதேவ். உக்ரைன் ஏற்கெனவே போரில் “கிளஸ்டர் வெடிகுண்டுகள்” பயன்படுத்தியதாக கூறி வரும் அவர், ரஷியாவும் அதனை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.