;
Athirady Tamil News

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மலேசியாவில் திறப்பு!!

0

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் திறந்து வைத்தார்.

இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையில் முக்கிய பங்கு வகிப்பது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மலேசியா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா – மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், தலைநகர் கோலாலம்பரில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவன மண்டல அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார்.

இந்த மண்டல அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் என்றும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கான கேந்திரமாகவும், மற்ற இந்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகவும் சேவையாற்றும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிக்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடு மலேசியா. தனது மலேசிய பயணத்தின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய வம்சாவளியினருடன் உரையாடினார். மேலும், மலேசிய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல், கலாச்சாரம் மற்றும் தொழில்துறையின் பிரபலங்கள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வி. சிவக்குமார், தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு வளர்ச்சித்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். ஒடிசி நடனம் உள்ளிட்ட பழமையான இந்திய பாரம்பரிய, கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் மலேசியாவில் நடைபெற்றதையும், பிரபல மலேசிய கலைஞர்களின் கர்நாடக மற்றும் ஹந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.