தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்!!
தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து விட்டது. தக்காளி விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தக்காளியை கொள்முதல் செய்து அதிகம் நுகரப்படும் மையங்களுக்கு விநியோகம் செய்யும்படி தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தக்காளியின் விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்க வேண்டுமென மத்திய நுகர்வோர் துறை அறிவுறுத்தி உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளது. டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் சில்லறை விற்பனை மையங்கள் மூலமாக தள்ளுபடி விலையில் தக்காளி விற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.