அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 21 பேர் பனிமலையில் சிக்கித்தவிப்பு!!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அமர்நாத் புனித யாத்திரை குழுவினர் மூலமாக கடந்த 4-ந் தேதி 21 பேர் கொண்ட குழுவினர் அமர்நாத் புனித யாத்திரை சென்றனர். இவர்கள் கடந்த 7-ந் தேதி காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 14 கி.மீ தூரமுள்ள அமர்நாத் கோவிலுக்கு சென்று மலைச்சாலையில் நடந்து சென்று பனி லிங்கத்தை தரிசித்தனர். அன்று இரவு கோவிலில் தங்கி மீண்டும் மறுநாள் நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு புறப்பட்டபோது நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டானது. இதையடுத்து தமிழக பக்தர்களை மேற்கொண்டு பயணம் செய்ய பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.
பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் யாரும் இங்கிருந்து செல்ல முடியாது என அவர்களை அங்கேயே தங்க அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மணிக்காம்ப் என்ற முகாம் பகுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக அவர்கள் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த குழுவில் தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி, தஞ்சாவூரைச் சேர்ந்த கண்ணன் நெய்வேலியைச் சேர்ந்த சரவணன், சண்முகராஜ், நிரஞ்சன், சகுந்தலா, மணி என 21 பேர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து சின்னமனூரைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் எங்களை காப்பாற்றி முகாமில் தங்க வைத்துள்ளனர். கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் 7-ந் தேதியே சாமி தரிசனம் செய்து முடித்து விட்டோம்.
9-ந் தேதி நாங்கள் ஊர் திரும்ப வேண்டிய நிலையில் 4 நாட்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.300 செலவாகிறது. சுகாதாரமான தண்ணீர், உணவு கிடைக்கவில்லை. வயதான பலர் இங்கு எங்களுடன் உள்ளதால் எப்போது சொந்த ஊருக்கு செல்வோம் என்ற ஏக்கம் நிலவி வருகிறது. தமிழக அரசு எங்களை ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரசு எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் அச்சத்துடனேயே உள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்றனர். இதனிடையே தங்கள் உறவினர்களை எப்போது காண்போம் என்ற ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தினரும், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.