தெலுங்கானா வளர்ச்சி குறித்து ரஜினிக்கு தெரிந்தது பாஜ.க.-காங்கிரசுக்கு தெரியவில்லை: பிஆர்எஸ் மந்திரி!!
தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அங்குள்ள ஜாகிராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:- தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அயராது உழைத்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் அவரது ஆட்சியில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் நகரம் மாபெரும் வளர்ச்சி அடைந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இதனை ஒப்புக்கொள்ள தவறி விட்டனர். தெலுங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மாநிலத்தின் உரிமையான நிதி பங்கு பறிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையை மாற்றினாலும் சரி, அல்லது காலாவதியான தலைவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பினாலும் சந்திரசேகர ராவ் கட்சியை வீழ்த்த முடியாது.
அவர் 3-வது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த என் டி ராமராவ் நூற்றாண்டு விழாவில்சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் ஐதராபாத் நகரம் மாபெரும் வளர்ச்சி அடைந்ததாக பேசினார். ரஜினிகாந்த் பேசியதை தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் தங்களுக்கு சாதகமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.