சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம்- 500 பேர் கைது!!
சென்னை மாநகராட்சி மண்டலம் 4, 5, 6 ஆகியவற்றில் உள்ள தூய்மை பணிகள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு செங்கொடி சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுடன் இதுகுறித்து முறையிடப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் இன்று மறியல் போராட்டத்தை செங்கொடி சங்கம் நடத்தியது. தூய்மை பணியை தனியாருக்கு கொடுப்பதால் இதனையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஏழை குடும்பங்களை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி இத்திட்டத்தை கைவிடக்கோரி மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு அவர்கள் முற்றுகையிட்டனர். சங்க தலைவர் கண்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனும் கலந்து கொண்டார்.
மாநகராட்சியின் தனியார் மயமாக்குதல் முடிவை கண்டித்து கோஷமிட்டனர். போராட்டத்தையொட்டி மாநகராட்சி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் முற்றுகையிட்டு கோஷமிட்ட அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈ.வே.ரா. பெரியார் சாலையில் அமர்ந்து மாநகராட்சியை கண்டித்து முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சிறிது நேரம் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் அந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. சென்ட்ரல், அரசு ஆஸ்பத்திரி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பெரியமேடு பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.