;
Athirady Tamil News

மோதி பிரான்ஸ் பயணம்: அனில் அம்பானி நிறுவனம் திவால் – ரஃபேல் ஒப்பந்தம் என்ன ஆகும்?

0

பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தை அவர் இந்த பயணத்தின் போது உறுதி செய்வார் என்று பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதே நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியா தனது விமானப்படைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை ஏற்கனவே வாங்கியுள்ளது.

2017-ம் ஆண்டு ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தை தனது இந்திய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டது. அப்போதே, அதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அனில் அம்பானி குழுமத்தில் இருந்த பெரும்பாலான நிறுவனங்கள் திவாலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் அனுபவம் இல்லாத போதும் அவர்களுடன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் தேவையா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஒரு காலத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்த அனில் அம்பானி இன்று மோசமான கால கட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்.

தொலைத்தொடர்பு, உள் கட்டமைப்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், கப்பல் கட்டுமானம், வீட்டுக் கடன் உள்பட பல தொழில்களில் அனில் அம்பானி ஒரு கட்டத்தில் சிறந்து விளங்கினார். பின்னர் கடனில் அவர் சிக்கிக் கொள்ள, அவரது பல நிறுவனங்கள் திவாலாயின. பல நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன.

ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் ஏலம் விடப்பட்டுவிட்ட நிலையில், ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட் (RNEL) நிறுவனமும் திவாலாகும் நிலையில் இருக்கிறது. இதன் மூலம் தான் பாதுகாப்புத்துறையில் அனில் அம்பானி நுழைந்திருந்தார்.

2016 ஜனவரி 25-ம் தேதி பிரெஞ்சு அதிபர் ஹாலந்தேவின் இந்திய வருகையின் போது ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டு செய்தியாளர் சந்திப்பில் மோதி, ஹாலந்தேவுடன் அப்போதைய இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள்.
கூட்டு நிறுவனத்தில் சர்ச்சைகள்

ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட்டின் தாய் நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகும். உண்மையில் பிபவப் டிஃபென்ஸ் அன்ட் ஆஃப்ஷோர் என்ஜினியரிங் லிமிடெட் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி குழுமம் 2015-ம் ஆண்டு வாங்கியிருந்தது.

அதன் பிறகே, அதன் பெயர் ரிலையன்ஸ் நேவல் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட் என்று மாற்றப்பட்டது. ரஃபேல் ஒப்பந்தம்தான் அந்நிறுவனத்தின் முதல் பெரிய ஒப்பந்தம்.

பிரான்ஸைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனம் ரிலையன்சுடன் கூட்டு சேர்ந்து டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கின. அந்த புதிய நிறுவனத்தில் ரிலையன்சுக்கு 51 சதவீதமும், டஸால்ட் நிறுவனத்திற்கு 49 சதவீதமும் பங்குகள் இருந்தன.

நாக்பூர் அருகே மிஹான் என்ற இடத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்நிறுவனம் புதிய ஆலை ஒன்றையும் நிறுவியது. ரஃபேல் போர் விமானத்திற்கான உதிரி பாகங்கள் இங்கே பல கட்டங்களாக தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் டிஃபென்ஸ் மற்றும் என்ஜினியரிங் நிறுவனம் தற்போது கடன் சுமையில் சிக்கியிருக்கிறது. கடனை திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்த சிலர் அந்நிறுவனத்தை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திற்கு இழுத்துள்ளனர்.

ஆமதாபாத்தில் உள்ள அதன் சிறப்பு அமர்வு அனில் அம்பானியின் நிறுவனத்தை ஏலம் விட உத்தரவிட்டுள்ளது.

அனில் அம்பானியின் நிறுவனத்தை ஏலம் எடுப்பதில் முன்னணியில் உள்ள ஸ்வான் எனர்ஜி தலைமையிலான ஹேஸல் மெர்கண்டைல் கன்சார்டியம் 2,700 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கிறது.

பாம்பே பங்குச்சந்தையில் பட்டிலியடப்பட்டுள்ள ரிலையன்ஸ் நேவல் டிஃபென்ஸ் மற்றும் என்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குதாரர்கள் விவரத்தை பார்க்கும் போது, அதில் அந்நிறுவனத்தின் புரோமொட்டார்களான அனில் அம்பானிக்கு மார்ச் 2023 வரை எந்தவொரு பங்கும் இல்லை என்பது தெரியவருகிறது. அதில், பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. 7.93 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரை சதவீத பங்குகளை வைத்துள்ளனர். மற்ற அனைத்து பங்குகளும் பொதுவான முதலீட்டாளர்களிடம் உள்ளன. அந்த நிறுவனம் தற்போது திவாலாவதால் அந்தப் பொதுவான முதலீட்டாளர்களும், எல்.ஐ.சி.யும் தான் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

2022-ம் ஆண்டு ஜூலை – செப்டம்பர் காலாண்டில் பாம்பே பங்குச்சந்தைக்கு ரிலையன்ஸ் நேவல் டிஃபென்ஸ் மற்றும் என்ஜினியரிங் நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் படி, அந்நிறுவனத்தின் வருவாய் வெறும் 68 லட்ச ரூபாய்தான். அதே காலகட்டத்தில், 527 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

2023-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி பங்குச்சந்தை தகவல்படி, 2021-22ம் நிதியாண்டு தரவுகளை அந்நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, அந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருமானம் 6 கோடியே 32 லட்ச ரூபாய். அதேநேரத்தில், அந்நிறுவனம் 2,086 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அனில் அம்பானி குழும நிறுவனங்களை உற்று நோக்கி வரும் பங்குச்சந்தை ஆய்வாளர் அவினாஷ் கோரக்கார் கூறுகையில், ரிலையன்ஸ் நேவல் டிஃபென்ஸ் மற்றும் என்ஜினியரிங் நிறுவனம் திவாலாவது இந்தோ – பிரெஞ்சு கூட்டு நிறுவனமான டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டையும் கண்டிப்பாக பாதிக்கும் என்றார்.

“இந்த கூட்டு நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட சரிசம பங்கைக் கொண்டுள்ளன. அதாவது, இரு நிறுவனங்களும் சரிசமமாக முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறான சூழலில், டஸால்ட் நிறுவனம் தனது பங்கை முதலீடு செய்துவிடும். ஆனால், அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு முதலீட்டிற்கு எங்கே போவது?” என்று அவர் கூறினார்.

2020-ம் ஆண்டு சீன வங்கிகளிடம் வாங்கிய கடன் தொடர்பான வழக்கில் தான் திவாலாகி விட்டதாகவும், கடனை திருப்பிச் செலுத்தும் நிலையில் இல்லை என்றும் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஒப்புக் கொண்டார்.

வாதத்தின் போது அனில் அம்பானியின் வழக்கறிஞர் குறிப்பிடுகையில், “அனில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு பூஜ்யம். அவர் திவாலாகிவிட்டார். கடன் தவணையை கட்டாததற்கு அதுவே காரணம். அவரது குடும்ப உறுப்பினர்களும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை” என்று கூறினார்.

நிதி நெருக்கடியால் அனில் அம்பானி அவரது நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாக இழந்து வரும் நிலையில், ரஃபேல் போர் விமான உதிரி பாகங்களை

“ரிலையன்ஸ் நேவல் டிஃபென்ஸ் மற்றும் என்ஜினியரிங் நிறுவனம் என்பது அனில் அம்பானி குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். கூட்டு நிறுவனம் குறித்த ஒப்பந்தத்தில் விதிகள் மாறுபட்டிருக்கலாம். ஆகவே, இந்த கூட்டு ஸ்தாபனம் தொடரலாம்.” என்று ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் நம்புகிறார்.

ஆனால், அனில் அம்பானி குழுமத்தின் மோசமான நிதி நிலை காரணமாக, இந்த கூட்டு ஸ்தாபனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டதற்கான இலக்கை அடைவது கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

“இந்த கூட்டு ஸ்தாபனத்தின் நிதிநிலை அறிக்கைகள் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூட பதிவேற்றம் செய்யப்படவில்லை. 2019-ம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டதே அதன் கடைசி நிதிநிலை அறிக்கை” என்று ஆசிஃப் கூறுகிறார்.

2019-ம் ஆண்டு மார்ச் 31 வரைக்குமான நிதிநிலை அறிக்கை என்று சொல்லப்படும் அறிக்கையில், டஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடன் 142 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே சரியாக ஓராண்டுக்கு முன்பு 38 கோடி ரூபாயாக இருந்தது.

அம்பானி குடும்பம்தான் இந்தியாவிலேயே பணக்கார குடும்பமாகும். ஆனால், இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியைக் காட்டிலும் அவரது இளைய சகோதரரான அனிலின் கதை சற்று மாறுபட்டது.

முகேஷ் ஒருபோதும் சர்ச்சைகளை நெருங்க விட்டதில்லை. ஆனால், அனில் அம்பானியோ பல முறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

அவரது இன்றைய மோசமான நிலைக்கு அவரது தவறான நிதி நிர்வாகமே காரணம் என்று அனில் அம்பானியை நெருக்கமாக அறிந்த பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குடும்பத்தின் சொத்து பாகப் பிரிவினையில் கிடைத்த நிறுவனங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக புதியபுதிய துறைகளில் அவர் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஆனால், அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் செயல் என்பது நிரூபணமாகிவிட்டது.

அவரது புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியவில்லை. அதேநேரத்தில் பாகப் பிரிவினையில் கிடைத்த நிறுவனங்களும் சரிவுப் பாதையில் இறங்கின. இதன் முடிவு அனில் அம்பானிக்கு பாதகமாக மாறிப் போனது. கடன் சுமையில் அவர் சிக்கிக் கொண்டார்.

அது 2007-ம் ஆண்டு. முகேஷ் – அனில் பாகப்பிரிவினை முடிந்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தன.

அந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் வரிசையில், முகேஷ், அனில் சகோதரர்கள் முன்னணியில் இருந்தனர். அனிலைக் காட்டிலும் முகேஷ் சிறிய வித்தியாசத்தில் தான் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அனில் அம்பானிக்கு 45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு சொத்துகள் இருந்தன.

2007-08ம் ஆண்டு பொருளாதார மந்தம் முகேஷ் அம்பானி உள்பட பல தொழிலதிபர்களை கடுமையாக பாதித்தது. அப்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 60 சதவீதம் சரிந்தது. பின்னர் அந்த மோசமான கால கட்டத்தில் இருந்து மீண்டு வந்த முகேஷ் அம்பானி மீண்டும் பழைய நிலையை எட்டி, தற்போது தொடர்ச்சியான வளர்ச்சியை கண்டு வருகிறார்.

அதற்கு மாறாக, 2008-ம் ஆண்டு அனில் அம்பானி தனது மூத்த சகோதரரை விஞ்சி விடுவார் என்று பலரும் நம்பினர். குறிப்பாக, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டிற்கு முன்பு வரை பலரின் நம்பிக்கையும் அதுவாகவே இருந்தது. ஆனால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு பல வகையிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறிப் போனது. ஒரு நிமிடத்திற்குள்ளாகவே வெளியிடப்பட்ட அதன் அனைத்து பங்குகளும் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டன.

அதன் ஒரு பங்கு விலை ஆயிரம் ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால் முகேஷை அனில் முந்தியிருப்பார். ஆனால், அது நடக்கவில்லை.

அதன் பிறகு அனில் அம்பானியின் ஒரு தொழிலும் செழிக்கவில்லை. அவருக்கு மிகப்பெரிய கடன் இருக்கிறது. தற்போதைய நிலையில் எதையும் புதிதாக தொடங்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். பெரும்பாலான தொழில் நிறுவனங்களை ஒன்று அவர்கள் விற்கிறார்கள் அல்லது அதில் இருந்து வெளியேறுகிறார்கள். அது மட்டுமே நடக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.