பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி- சர்வதேச நாணய நிதியம் வழங்குகிறது!!
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது. கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது.
மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, இந்த கடன் உதவி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இது நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்” என்றார்.