;
Athirady Tamil News

உலகளாவிய தீய சக்திகள் தொழில்நுட்பத்தை சமூகக்கேட்டிற்கு பயன்படுத்துகின்றன: அமித் ஷா!!

0

“என்.எஃப்.டி (NFTs), செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் மெட்டாவெர்ஸ் (Metaverse) காலத்தில் குற்றங்களும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற G20 மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மனிதர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை நெருக்கமாக கொண்டு வருவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், குடிமக்களுக்கும் அரசாங்கங்களுக்கும், பொருளாதார மற்றும் சமூக தீங்கை விளைவிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சில சமூக விரோத சக்திகளும் உலகளாவிய சக்திகளும் வளர்ந்து வருகின்றன. குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும்.

நமது பாதுகாப்பு சவால்கள், ‘டைனமைட்’ போன்ற வெடிகளில் இருந்து ‘மெட்டாவெர்ஸ்’ காலத்திற்கும், ‘ஹவாலா’விலிருந்து ‘கிரிப்டோகரன்சி’ காலத்திற்கும் மாறியிருப்பது உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் சேர்ந்து ஒரு உத்தியை வகுக்க வேண்டும். இணையதளங்களின் அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட வேண்டும். இந்த விஷயங்களில் எந்த தேசமும் தனியாக போராட முடியாது. உலகின் பல நாடுகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. மேலும், இந்த அச்சுறுத்தல் உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் உள்ளது. 2019லிருந்து 2023 வரையில் சைபர் தாக்குதல்களால் உலகிற்கு சுமார் 5.2 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

தீய நோக்கங்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்படுவதால் குற்றங்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு மேலும் சிக்கலாகிறது. சைபர் குற்றங்கள் நாட்டின் எல்லைகளால் கட்டுப்படுவதில்லை. இதனை மனதில் கொண்டு, வெவ்வேறு சட்டங்களின் கீழ் நாம் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு சில சீரான தன்மையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் தங்கள் அடையாளத்தை மறைக்கவும், தீய சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்பவும், டார்க்நெட் (Dark Net) போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளுக்கு மெய்நிகர் சொத்துக்கள் (virtual assets) போன்ற புதிய முறைகளை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். டிஜிட்டல் தரவுகளின் ஓட்டத்தை (Digital Data Flow) பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் குற்றம் மற்றும் பாதுகாப்போடு அதற்குள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கும், அதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் இந்திய உள்துறை அமைச்சகம் செய்து வரும் முயற்சிகளை அவரின் இந்த அறிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. டிஜிட்டல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேவைப்படும் ஒரு பாதுகாப்பான மற்றும் சிறப்பான சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என ஒரு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.