கடன் செயலி முகவர்களின் அராஜகம்: பெங்களூரூவில் கல்லூரி மாணவன் தற்கொலை!!
சீனாவை மையமாக கொண்டு செயல்படும் கடன் செயலிகளின் மூலம் கடன் பெறுவதும், அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த நிறுவன முகவர்களால் மிரட்டலுக்கு ஆளாவதும், அதனால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் எலஹங்காவில் உள்ள நிட்டே மீனாட்சி கல்லூரியில் பொறியியல் படிப்பில் 6-வது செமஸ்டர் படித்து வந்த தேஜஸ் (22) எனும் பொறியியல் மாணவர், இரு தினங்களுக்கு முன்பு ஜலஹள்ளியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: ‘ஸ்லைஸ் அண்ட் கிஸ்’ (Slice and Kiss) எனப்படும் ஒரு சீன செயலி மூலம் மாணவர் தேஜஸ் கடனாக பணம் பெற்றிருக்கிறார்.
ஆனால் அந்த தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் விவரத்தை அறிந்த தேஜஸின் தந்தை கோபிநாத், மகன் சார்பில் தொகையை தவணை முறையில் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனாலும் கடன் வழங்கிய முகவர்கள் தேஜஸின் வீட்டிற்கு நேரில் சென்றும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் பலமுறை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர் பெற்ற கடனை உடனே திருப்பி செலுத்தத் தவறினால், அவரது செல்போனில் உள்ள அந்தரங்கப் புகைப்படங்களை அம்பலப்படுத்துவதாக அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேஜஸ் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருக்கிறது. “நான் என்ன செய்தாலும் அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவும். இதை தவிர எனக்கு வேறு வழியில்லை. என் பெயரில் உள்ள மற்ற கடன்களை என்னால் செலுத்த முடியவில்லை. இது எனது இறுதி முடிவு. குட்பை.” என்று தேஜஸ் தற்கொலைக்கு முன் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு, கோபிநாத் நிலுவையில் உள்ள கடனை அடைக்க கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் கடன் வழங்கியவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேஜஸ் திருப்பி செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.46000 என தெரிகிறது.