மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி!!
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத கோழி இறைச்சி விற்பனை செய்த நிலையத்தை தற்காலியமாக மூடுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே விற்பனைக்காக பாவனைக்குதவாத கோழி இறைச்சி விற்பனை செய்த நிலையத்தை கண்டு பிடித்திருந்தனர்.
பாவனைக்கு உதவாத கோழி இறைச்சியை விற்பனை செய்ததாக குற்றச் சாட்டின் பேரில் அதன் உரிமையாளருக்கு எதிராக அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரியினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டருந்தது.
இவ் வழக்கு விசாரணை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது கைப்பற்றப்பட்ட கோழி இறைசியை அழித்தொழிக்குமாறும், கோழி இறைச்சி விற்பனை நிலையைத்தை சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் துப்பரவாக மீள திருத்தி அதன் அறிக்கையை நீதி மன்றில் சமர்ப்பிக்குமாறு சுகாதார வைத்தியதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் ஏற்கனவே பல தடவை குறித்த கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் சுகாதாரத்திற்கு கேடு விளை விக்கும் மற்றும் வியாபாரத்திற்கு பொருத்தமில்லாத இடத்தில் மீன் விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு மீன் விற்பனை செய்வதை தடை செய்ததோடு, அவ் இடத்தில் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளரிடம் நீதி மன்றினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.