இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுகிறது.. கூகுள் நிறுவனம் மீது 8 நபர்கள் வழக்கு!!
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட தனது பார்ட் (Bard) எனும் சாட்பாட் செயலியை பயிற்றுவிப்பதற்காக இணையத்தில் உருவாக்கிய அனைத்தையும் திருடுவதாக, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீது 8 நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் இதுவரை உருவாக்கிய மற்றும் பகிரப்பட்ட அனைத்தையும் கூகுள் ரகசியமாகத் திருடுகிறது என்றும், இணையதளங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத தரவுகளை அகற்றும் செயலானது அவர்களின் தனியுரிமை மற்றும் சொத்துரிமைகளை மீறுவதாகும் எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூகுள், அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) மற்றும் கூகுளின் AI துணை நிறுவனமான டீப்மைண்ட் (DeepMind) ஆகியவற்றை உள்ளடக்கியது.
“செயலியை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவின் ஆய்விற்கு மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் குறித்த தரவுகள் அவசியமானது. ஆக்கப்பூர்வமான மற்றும் நகல் எழுதப்பட்ட படைப்புகளை கூகுள் எடுத்து கொண்டது. இணையம் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. எங்கள் சிந்தனை படைப்புகளுக்கு கூகுள் உரிமையாளருமில்லை. எங்கள் ஆளுமையின் வெளிப்பாடுகள், எங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் படங்கள் அல்லது வேறு எதையும் நாங்கள் இணையத்தில் பகிர்வதால் அது கூகுளுக்கு சொந்தமாகி விடாது” என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ரையான் கிளார்க்சன் தெரிவித்தார்.
“AI மாதிரிகளைப் பயிற்றுவிக்க, திறந்த வலை (open web) மற்றும் பொது தரவு தொகுப்புகளில் வெளியிடப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நாங்கள் பல ஆண்டுகளாக கூகுள் டிரான்ஸ்லேட் போன்ற சேவைகளுக்கு எங்கள் AI கொள்கைகளுக்கு ஏற்ப பொறுப்புடன் பயன்படுத்துகிறோம். அமெரிக்க சட்டம் புதிய பயனுள்ள பயன்பாடுகளை உருவாக்க பொதுத்தகவலைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூகுளின் பொது ஆலோசகர் ஹலிமா டெலைன் பிராடோ தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் ஆன்லைன் தனியுரிமை கொள்கையை புதுப்பித்த கூகுள், அதன் AI கருவிகளை பயிற்றுவிக்க பொதுவில் கிடைக்கும் தரவுகளை அது பயன்படுத்தி கொள்ளும் என்று கூறியது.
ஆனால் “பார்ட் போன்ற AI தயாரிப்புகளை உருவாக்கவும், அத்தரவுகளால் வணிகரீதியான ஆதாயம் அடையவும் இந்த கொள்கைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தனிப்பட்ட தரவுகளையும், பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள், காட்சிக் கலைகள் மற்றும் மூல குறியீடுகளை தவறாக பயன்படுத்துவதாக மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் AI நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.