சந்திரயான்- 3 விஞ்ஞான சமூகத்தின் உழைப்புக்கு கிடைத்த பலன்- ராகுல் காந்தி டுவீட்!!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று ஏவியது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. இதைதொடர்ந்து, இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:- இன்று, நம்மில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வானத்தைப் பெருமிதத்துடன் பார்க்கிறோம். சந்திரயான்- 3 என்பது 1962ல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து விஞ்ஞான சமூகத்தின் பல சதாப்தங்களாக உழைப்புக்கு கிடைத்த பலனாகும். அதைத் தொடர்ந்து 1969ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது. சந்திரயானின் வெற்றி, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றும். உண்மையிலேயே நம்பமுடியாத சாதனை! இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்.