தகவல் தருமாறு யாழ். மாவட்ட மக்களிடம் கோரிக்கை !!
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பணம் பெற்று இளைஞர் யுவதிகளை ஏமாற்றுபவர்கள் தொடர்பில் தகவல் தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்து, யாழில் நடைபெறவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பணம் பெற்று ஏமாற்றியதான முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்ததுடன், இவ்வாறு வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் ஏமாற்றுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன்,
வெளிநாட்டிற்கு போவதற்கான இளைஞர் யுவதிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால், (காட்டுக்கந்தோர்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இருப்பதாகவும் அங்கு தேவையான விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தொழிற்பயிற்சி நிலையம், வடமாகாணத்திற்கான நிலையமாக அமைக்கப்படவுள்ளதுடன், அதற்குரிய காணியை ஒழுங்குபடுத்தி தருமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான க்ளோகல் 2023 கண்காட்சி மூலம் வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர் யுவதிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்கடத்தல் மற்றும் பணத்தை ஏமாற்றுபவர்கள் தொடர்பில் அறிவதற்கும், இளைஞர்கள் விழிப்படையவும் இந்த க்ளோகல் 2023 கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.